திண்டுக்கல்லில் இருந்து கொல்கத்தாவுக்கு கூரியரில் கடத்திய துப்பாக்கி பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா புறப்பட தயாரானது. அதில் அனுப்புவதற்காக வந்திருந்த கூரியர் பார்சல்களை தனியர் விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்து, விமானத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, திண்டுக்கல் பகுதியில் இருந்து கொல்கத்தா முகவரிக்கு வந்திருந்த ஒரு பார்சலை ஸ்கேன் செய்தபோது, அதில் அபாயகரமான பொருள் இருப்பதாக எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பார்சலை தனியே எடுத்து வைத்து ஆய்வு செய்தனர். அந்த பார்சலை திண்டுக்கல் பகுதியை சேர்ந்த அனீஷ் என்பவர் கொல்கத்தாவிற்கு அனுப்பி இருந்தார். அந்த பார்சலில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தபிறகு, அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் துப்பாக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதை பறிமுதல் செய்து, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், பார்சலில் இருந்த செல்போன் எண்ணை வைத்து, அதை அனுப்பிய திண்டுக்கல் அனீஷ் என்பவரிடம் விசாரித்தனர். அதற்கு அவர், அது ஏர்கன் மாடல் துப்பாக்கி தான். அது அபாயகரமானது இல்லை. மேலும் எனக்கு துப்பாக்கி லைசென்ஸ் இருக்கிறது என்று கூறியுள்ளார். உடனே போலீசார், துப்பாக்கி உரிமத்துடன் உடனடியாக சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: