முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நினைவாக திமுக நிர்வாகிகளுக்கு ரூ.15 லட்சத்தில் கொரோனா பாதுகாப்பு உபகரணம்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நினைவாக திமுக நிர்வாகிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் கொரோனா பாதுகாப்பு உயர் ரக உபகரணங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அ.ரகுமான்கான் நினைவாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக நிர்வாகிகளுக்கு கொரோனா பாதுகாப்பு உயர் ரக உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு தலைமை வகித்தார். சேப்பாக்கம் பகுதி செயலாளர் எஸ்.மதன்மோகன், ஏ.பி.ஆர் எம்.காமராஜ் முன்னிலை வகித்தனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.15 லட்சம் மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உயர் ரக உபகரணங்களை திமுக நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: கழக நிர்வாகிகள் தான் திமுகவின் இதய துடிப்பு. அந்த இதய துடிப்புக்கு நாம் முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன்படி திமுக நிர்வாகிகளுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ரகுமான்கானை இந்த கொரோனாவுக்கு நாம் பலி கொடுத்து இருக்கிறோம். முத்தமிழறிஞர் கலைஞருக்கு உற்ற தம்பியாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்ற அண்ணனாகவும் திகழ்ந்தவர் ரகுமான்கான்.  அவரின் நினைவாக இந்த உபகரணம் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா அன்பழகன், ஏ.எம்.கணேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரகுமான்கானின் மகன்கள் டாக்டர் அ.சுபேர்கான், அ.ரியாஸ்கான் ஆகியோர் செய்திருந்தனர்.

* சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: தயாநிதி மாறன் பேச்சு

விழாவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசியதாவது: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சரித்திர சாதனை பெற்ற தொகுதி. பல விஐபிக்கள் போட்டியிட்ட தொகுதி ஆகும். திமுக தலைவர் கலைஞர் பலமுறை இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும். அவரை பெருபான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து எம்எல்ஏ ஆக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: