×

கல் குவாரிகளில் கொள்ளை போகுது கனிமவளம்: கடத்தல்காரர்களுடன் பங்குபோடும் அதிகாரிகள்

கோவை: கோவை மாவட்டத்தில் திருமலையம்பாளையம், மதுக்கரை, பாலத்துறை, நாச்சிபாளையம், கிணத்துக்கடவு, நெகமம், மேட்டுப்பாளையம், காரமடை உள்பட பல்வேறு பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. அரசின் கனிம வளத்துறை கட்டுப்பாட்டிலும் சில குவாரிகள் இருக்கிறது. கல் குவாரிகளில் கல், கிராவல் மண் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. கல் குவாரிகளில் பெரும்பாலானவற்றில் முறைேகடாக அதிக ஆழத்தில் கல் தோண்டி எடுக்கப்படுகிறது. வெடி வைக்கக்கூடாது என தடை இருந்தும், பின்பற்றப்படுவது இல்லை. டெட்டனேட்டர், அமோனியம் நைட்ரேட், ஜெலட்டின் உள்ளிட்ட வெடி பொருட்களையும் விதிமுறை மீறி பயன்படுத்துகிறார்கள்.

வெடி வைப்பவர் (பிளாஸ்டர்) அதற்கான சிறப்பு பயிற்சி, படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆனால், எந்த பயிற்சியும் இல்லாத நபர்களை, வெடி வைக்க பயன்படுத்தும் நிலைமை இருக்கிறது. தினமும் பாறை உடைத்து, மாவட்ட அளவில் 10 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான ஜல்லி, போல்டர் கற்கள் பெறப்படுகிறது. தொடர் கடத்தல் காரணமாக, பல இடங்களில் புளூ மெட்டல், பிளாக் மெட்டல் போன்றவை குறைந்து விட்டது. கண்ணாடி படிகார கற்கள், வெள்ளை கற்கள் அதிகமாக கிடைப்பதால் கல்லாங்கொத்து பகுதியை விட்டு விட்டு, விவசாய தோட்டங்களை விலைக்கு வாங்கி ஜேசிபி, பொக்லைன் மூலமாக ஆழமாக தோண்டி கற்கள் எடுக்கும் நிலைமை உள்ளது.

கோவை புறநகர் பகுதியான நாச்சிபாளையம், பிச்சனூர், கிணத்துக்கடவு, மதுக்கரை வட்டாரத்தில் 200 அடி ஆழத்திற்கும் அதிகமாக கல் குவாரிகள் தோண்டப்பட்டுள்ளது. 100 அடிக்கு கீழ் கல் குவாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டபோதும், கனிம வளம் மற்றும் புவியியல் துறையினர் கண்டுகொள்ளவில்லை. கல் குவாரிகளில் இருந்து மாதம் 3 முதல் 5 லட்சம் ரூபாயும், உரிமம் புதுப்பிக்க கல் குவாரியின் பரப்பிற்கு ஏற்ப 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரையும் கனிம வளத்துறையில் லஞ்சம் பெறப்படுகிறது. குவாரிகளில் இருந்து குறிப்பிட்ட அளவு மட்டுமே கற்களை எடுக்கவேண்டும். ஆனால், இரவு-பகலாக கற்களை வெட்டி எடுத்து, போலி டிரிப் சீட் மூலமாக கேரளாவிற்கு கடத்துவது தொடர்கிறது.

தமிழக-கேரள எல்லையான கோவை வேலந்தாவளம், வாளையார்  செக்போஸ்ட்கள் வழியாக கற்கள், ஜல்லி கடத்துவது வாடிக்கையாக நடக்கிறது. கல் குவாரிகளில் நடக்கும் இந்த விதி மீறல்களை கனிம வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இங்கிருந்து எழும் மாசு விவகாரங்களை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இத்துறையினர், மாதந்தோறும் வெளிப்படையாக லஞ்சம் வாங்கி அத்துமீறலுக்கு அனுமதி வழங்கி வருகிறார்கள். கடத்தல் ஜல்லி கற்கள் கொண்டு செல்லும் லாரிகளை திருமலையம்பாளையம் பகுதி பொதுமக்கள் பலமுறை சிறை பிடித்து போராட்டம் நடத்தியும் பலன் இல்லை. மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.  

இதுபற்றி கிராம மக்கள் கூறியதாவது: கேரள மாநிலத்தில், எம்.சாண்ட், கிராவல் மண், ஜல்லி, போல்டர் கற்கள் எடுக்க கடும் கட்டுப்பாடு இருக்கிறது. அதனால், கோவையில் இருந்து இவ்வகை பொருட்கள் வெட்டி எடுக்கப்பட்டு, பட்டப்பகலில் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. அங்கே அதிக விலைக்கு விற்கப்படுகிறது. தமிழக அரசின் வருவாய் துறையினரும், கனிம வளத்துறையினரும் இதை கண்டுகொள்வதில்லை. நாங்கள் லாரிகளை பிடித்து கொடுத்தாலும், நடவடிக்கை எடுப்பதில்லை. லாரிகளை வழியனுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். கனிம வளங்களை கடத்துபவர்களிடமிருந்து அதிகாரிகள் கமிஷன் வாங்குகின்றனர்.

அதிக பாரம் ஏற்றிய லாரிகள், பிரதான சாலைகளில் செல்லாமல், திருட்டுத்தனமாக கிராமங்கள் வழியாக செல்வதால், இங்குள்ள சாலைகள் சேதமாகி விடுகின்றன. பல இடங்களில் மேடு, பள்ளமாக காட்சி அளிக்கிறது. இதை, சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. கிராம பகுதி வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கக்கூடாது. கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிம பொருட்கள் கடத்துவதை அடியோடு தடுக்கவேண்டும். இவ்வாறு கிராம மக்கள் கூறினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கந்தசாமி கூறியதாவது: கல் குவாரிகள் மற்றும் கிரசர்களில் இருந்து பறக்கும் தூசி மற்றும் சாம்பல், வேளாண் விளைபயிர்களின் மீது படிந்துவிடுகிறது.

இதனால் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்ய முடியாமல் காய்ந்து அழிந்துபோய் விடுகிறது. தென்னை, வாழை, தக்காளி போன்ற பயிர்கள் பல ஏக்கர் அளவிற்கு நாசமாகி வருகிறது. விவசாய தோட்டத்தின் நடுவே கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கி முறைகேடு செய்கிறார்கள். கனிம வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய் துறை, காவல்துறை என பல்வேறு துறையினர் வேடிக்கை பார்க்கிறார்கள். கண் முன் தெரியும் தவறுகளை தட்டிக்கேட்கவும், கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்யவும் எந்த அதிகாரிக்கும் துணிவில்லை. ஆய்வுசெய்கிறோம்... கண்டுபிடிக்கிறோம்... என அலட்சியமாக பதில் சொல்கிறார்கள்.

இவ்வாறு கந்தசாமி கூறினார். தமிழக அரசின் கனிமவளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘யார் என்ன கேட்டாலும் பதில் சொல்லக்கூடாது என எங்களுக்கு, மேலதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். கனிம வளம் கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் ஆதாரத்துடன் புகார் அளித்தால், கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். கல் குவாரிகளில் விதிமுறை மீறல் இருந்தால் அதை மூடுவோம். லைசென்சை ரத்து செய்வோம்’’ என்றனர்.

செங்கல் சூளைகளிலும் விதிமீறல்
கற்கள் போலவே கோவையில் உள்ள செங்கல் சூளைகளிலும் விதிமீறல் நடக்கிறது. அரசு நிர்ணயித்த அளவைவிட பல மடங்கு ஆழம் தோண்டி மண் எடுப்பது, உரிய வரி செலுத்தாமல் செங்கல் விற்பனை செய்வது என பல்வேறு விதிமீறல் இத்துறையிலும் நடக்கிறது. அதன் எதிரொலியாகத்தான் கோவை தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் சமீபத்தில் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.

Tags : Robbery ,quarries ,smugglers , Robbery at stone quarries Minerals: Officers involved with smugglers
× RELATED கல் குவாரி திட்ட கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு