×

புதிய வேளாண் மசோதாக்களால் காணாமல் போகுமா ரேஷன் கடைகள்?: நடுத்தர மக்கள் அச்சம்!!

நிலங்கள் இனி கார்ப்பரேட் பிடியில்?
என்னவாகும் விவசாயிகள் நிலைமை?

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய வேளாண் மசோதாக்கள், நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்திலிருந்து நெல், கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை நீக்கும் சட்டம், இந்தியா முழுவதையும் ஒரே வேளாண் வணிக மண்டலமாக்கும் சட்டம், வேளாண் நில ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் ஆகிய மூன்றையும் ஜூன் 3ம் தேதி மத்திய அரசு அவசரச் சட்டங்களாக பிறப்பித்தது. இவை தான் தற்போது வேளாண் சட்டங்கள் என்ற பெயரில் மசோதாக்களாக உருவெடுத்துள்ளன.

முதல் பெண் அமைச்சர் ராஜினாமா
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் இதுவரை நிகழாத சம்பவமும் நடந்துள்ளது. ஒரு துறையின் மசோதா தாக்கல் செய்யும்போது, அந்த துறையைச் சார்ந்த அமைச்சரே ராஜினாமா செய்வது இதுவரை நிகழாத அதிசயம். பிரதமர் நரேந்திரமோடியின் அமைச்சரவையில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தனது பதவியை துணிந்து ராஜினாமா செய்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலிதளத்தை சேர்ந்தர் பாதல், மோடி அமைச்சரவையில் இருந்து விலகிய முதல் பெண் அமைச்சர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். வேளாண் மசோதாக்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், பாஜ, அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே மசோதாக்களை ஆதரிக்கின்றன.

இரட்டை நிலை
தமிழகத்தைச் சேர்ந்த 38 திமுக உள்ளிட்ட அதன் தோழமை கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக ஒன்றுபட்டு நின்ற போதும், அதிமுகவைச் சேர்ந்த ஒரே எம்பியான துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் வேளாண் மசோதாக்களை ஆதரித்துள்ளார். அதேசமயம், அதிமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், இந்த சட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் பேசி அதிர்ச்சியூட்டிள்ளார். இவ்விஷயத்தில் பாம்பிற்கு தலையாகவும், மீனுக்கு வாலாகவும் இருக்கும் அதிமுகவின் நிலைபாடு விவசாயிகளின் நலனில் அக்கறையில்லாததை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

யாருக்கான சட்டங்கள்?
விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் என்று இந்த சட்டங்களின் பெயர்களில் உள்ள ஊக்குவித்தல், உதவுதல் போன்ற சொற்கள் மயக்கம் தரக்கூடியவை. ஆனால், அவை யாருக்கு உதவப்போகின்றன என்பது தான் கேள்வி.
விமானம், ரயில், சுரங்கம், காப்பீடு உள்ளிட்ட துறைகளின் பங்குகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வாரியிறைத்த பாஜ அரசு, தற்போது விவசாயத்தையும் கையளிக்க உள்ளது. அதற்குத்தான் இந்த அவசர, அவசரமாக வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியுள்ளதாக இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் சொல்வது உண்மையா?
ஆனால், பிரதமர் மோடியோ, ``மாநிலங்களில் விவசாயிகள் பாதுகாப்புக்கென ஏற்கனவே உள்ள நடைமுறைகள் நீடிக்கும். குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடரும். விவசாயிகளின் விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்யும். உழவர் சந்தைகளும் நீடிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார். ஆனால், சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளின்படி குறைந்தபட்ச விலை நிர்ணயத்திற்கென ஒரு சட்டத்தைக் கொண்டு வர ஏன் மத்திய அரசு தயங்குகிறது? ஏனெனில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை உண்டு என்ற எந்த பிரிவும் இடம் பெறவில்லை.

பயனாளிகள் எத்தனை பேர்?
விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என பிரதமரின் பெயரில் துவங்கப்பட்ட கிசான் திட்டம் வெற்றியடையவில்லையென்பதை தகவல் அறியும் சட்டம் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது ஒரு இணையதளம். பிரதான் மந்திரி கிசான் திட்டத்தை அமல்படுத்திய முதலாண்டில் 10 விவசாயிகளில் மூன்றுக்கும் குறைவானவர்கள் மட்டுமே ரூ.6,000 பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 2018ம் ஆண்டு டிசம்பர் முதல் 2019ம் ஆண்டு நவம்பர் வரை ஓராண்டிற்கு ஒதுக்கிய தொகையில் 41 சதவீதம் மட்டுமே மோடி அரசு செலவழித்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 25 சதவீதம் விவசாயிகள் மட்டுமே மூன்று தவணைகளிலும் பயனைடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டு காலப்பகுதியில் 44 சதவீத விவசாயிகள் இரண்டு தவணைகளையும், 52 சதவீத விவசாயிகள் ஒரே தவணையும் மட்டுமே பெற்றுள்ளனர். அதாவது முதலாண்டில் 48 சதவீத விவசாயிகள் ஒரு தவணை கூடபெறவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஒராண்டு காலப்பகுதியில் 7.6 கோடி விவசாயிகள் ஒரு தவணையாக ரூ.2,000 பெற்றதாக மத்திய அமைச்சகம் வழங்கிய தரவுகள் கூறுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 14.5 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று அரசு மதிப்பிட்டுள்ளதன்படி பார்த்தால், 6.8 கோடி விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் ஒரு தவணை கூட பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.

கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை
விவசாயக்கடனைக் கட்ட முடியாமல் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. ஆனால், விவசாய கடனை ரத்து செய்ய முடியாது என்று உறுதியாகக் கூறும் மத்திய பாஜ அரசு, இந்த பட்ஜெட்டில் மட்டும் ஏழு லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையாய் வாரி வழங்கியுள்ளது. அது மட்டுமின்றி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் வங்கி மோசடி செய்தவர்களின் கடன் 68 ஆயிரத்து 670 கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது.

மாநில உரிமை பறிப்பு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டத்தைப் பொருத்தவரை விவசாய விளைபொருட்களை மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எந்த இடத்திலும் வியாபாரம் செய்ய வழி வகுக்கிறது. நெல், கோதுமை போன்றவற்றிற்கு கொடுக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி இந்த சட்டங்கள் பேசவில்லை. பெருநிறுவனங்கள் வேளாண் விளைபொருட்களை வாங்கிக் குவித்துப் பதுக்கி வைத்து, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அதிக விலைக்கு விற்றுக் கொள்வதற்கான ஏற்பாட்டையே புதிய சட்ட விதிகள் கூறுகின்றன. இந்தியாவில் விவசாயம் மாநில அரசின் கீழ் உள்ளது. ஆனால், மத்திய அரசின் மூன்று மசோதாக்களும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகவே உள்ளன. பெரிய விதை நிறுவனங்கள், கான்ட்ராக்ட் விவசாய நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்களுக்கு வசதியாகவே இந்தச் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்பதற்கு பல ஆதாரங்களை விவசாய சங்க தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உணவுப்பொருள் விலை உயரும்
அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் என்பது எவ்வளவு உணவுப்பொருள்களை வேண்டுமானாலும் எத்தனை காலத்திற்கு வேண்டுமானாலும் பதுக்கி வைக்கலாம் என்பதை அனுமதிக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாவின்படி வெங்காயம், சமையல் எண்ணெய், உருளைக்கிழங்கு போன்றவை அத்தியாவசிய பொருள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன.இப்பொருட்களை அதிகளவில் இனிமேல் இருப்பு வைக்க முடியும் என பாஜ அரசு சமாதானம் சொல்கிறது. உண்மையில் வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை அதிகளவில் பதுக்கலுக்கே வாய்ப்புகள் அதிகம். இதுபோல உணவுப்பொருட்களை பதுக்குவதன் மூலம் செயற்கை உணவுத்தட்டுப்பாடு ஏற்படும். ஏழை, எளிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு உணவுப்பொருட்களின் விலை இருமடங்கு உயரும் என்ற அபாயத்தை இச்சட்டம் கொண்டு வந்துள்ளது.

நிலமற்ற கூலிகளாக மாறும் நிலை
அத்துடன் ஒப்பந்தச் சாகுபடி என்ற பெயரில் இந்திய விவசாய நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க இயற்றப்பட்டுள்ள சட்டம், உணவுப்பொருள் ஏற்றுமதி என்பதற்கு பதில், ஏற்றுமதிக்கு தேவையான உற்பத்தி என்ற நிலை ஏற்படும். அதாவது உலகச்சந்தையில் எந்த பொருளுக்கு தட்டுப்பாடு இருக்கிறதோ, அதை உற்பத்தி செய் என்று இனி விவசாயிகளுக்கு கார்ப்பரேட் கொடுக்கும் அழுத்தம் உணவுப்பஞ்சத்தை உருவாக்கும். நிலம் மட்டும் விவசாயி பெயரில் இருக்கும். மற்ற அனைத்தையும் கார்ப்பரேட் தான் தீர்மானிப்பார்கள். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்திலேயே விவசாயக் கூலிகளாக மாற்றப்படுவார்கள். ஒப்பந்தத்தில் பிரச்னை வந்தால், பெரிய நிறுவனங்களை தனி விவசாயியால் எப்படி எதிர்கொள்ள முடியும்? ஏற்கனவே தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு விவசாயிகள் வழங்க வேண்டிய பரிந்துரை விலையான 1217 கோடி ரூபாய் பாக்கியை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றன. தனியார் கரும்பு ஆலைகளை எதிர்கொள்ள முடியாத விவசாயிகள், கார்ப்பரேட் கம்பெனிகளை எப்படி எதிர்கொள்ள முடியும்?

இடைத்தரகர்களுக்கும் லாபம்
`ஒரே நாடு ஒரே சந்தை’ என்கிற முறையில் இந்தியாவில் எந்த மூலையில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அந்தப் பொருளுக்கு எந்த இடத்தில் அதிகமான விலை கிடைக்கிறதோ, அங்கு போய் அந்தப் பொருளை விற்கலாம் என்று பாஜ கட்சியினர் கூறுவதைக் கேட்டு விவசாயிகள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இந்தியாவில் 86 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகள். உற்பத்தி செய்யும் பொருட்களை அவர்கள் வசிக்கும் தாலுகாக்களைத் தாண்டி விற்பனைக்கு கொண்டு வருவதில்லை. `ஒரே நாடு ஒரே சந்தை’ என்பது வியாபாரிகளுக்கும், இடைத்தரகர்களுக்கும் தான் லாபம் தரும். எங்களுக்கு எதையும் தராது என விவசாயிகள் கூறுகின்றனர்.

ரேஷன் கடைகள் குளோஸ்
வேளாண் விளைபொருட்கள் கார்ப்பரேட்டுகளுக்கு விடப்படுவதால், நெல் நேரடிக் கொள்முதல் படிப்படியாகக் கைவிடப்படும். இதன் மூலம் நியாய விலைக்கடைகள் (ரேஷன் கடைகள்) மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் உழவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரானவை என்பதால் அனைத்து பகுதியிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பொருளாதார வீழ்ச்சி
இந்தியாவில் கொரோனா தொற்றால் 51 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் (செப். 24 வரை) உயிரிழந்துள்ளனர். உலக அளவில் ஒப்பிடும்போது, இந்தியாவில் மருத்துவப் பரிசோதனை விகிதம் குறைவாகவே உள்ளது என்று அகில இந்திய மருத்துவ அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. கொரோனா முடக்கநிலையால் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி -23.9சதவீதம் சுருங்கியிருப்பதாக ஆக. 31ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

வேலையின்மை
கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னை காரணமாக, இந்தியாவில் 13.5 கோடி பேர் வேலையிழப்பார்கள் என சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆர்தர் டி லிட்டில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 12 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும், 4 கோடி பேர் மோசமான வறுமை நிலைக்கு செல்லக்கூடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இப்படி இந்தியா நெருக்கடியில் உள்ள நிலையில் தான், விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கைவைக்கும் வகையில் புதிய வேளாண் மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்களை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்புவதே இந்தியாவின் விவசாயத்தை பாதுகாக்கும் வழியாகும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்துகின்றன. அதற்கான அழுத்தத்தை அரசியல் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், தன்னார்வல அமைப்புகள், விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களின் ஒன்றுபட்ட குரலே தர முடியும்.

காத்திருக்கும் உணவுப்பிரச்னை
அகில இந்திய விவசாய சங்க மாநில செயலாளர் டில்லிபாபு கூறுகையில், ``விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்கள் விவாதத்திற்கு உட்படுத்தாமலே நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மசோதாக்களால் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இப்படி கூறுவதன் மூலம் தமிழக விவசாயிகளை அவர் ஏமாற்றி விட்டார். அவரை தமிழக விவசாயிகள் மன்னிக்கமாட்டார்கள். தமிழகத்தில் அக்டோபர் முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ஆனால், ரேஷன் கடைகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் விவசாய மசோதாக்களை சட்டமாக்க மத்திய அரசு துடிக்கிறது. இந்த சட்டத்தின் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் ஒழிக்கப்படும். அப்போது ரேஷன் கடைகளுக்கான பொருட்களை மத்திய அரசு தரப்போவதில்லை. ரேஷன் கடைகளை நம்பியுள்ள கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் உணவுப்பிரச்னையில் சிக்க உள்ளனர். இந்த ஆபத்தை தமிழக முதல்வர் உணரவில்லை’’ என்கிறார்.

விவசாயிகள் தற்கொலை
2018ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 5,763 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், 2018ம் ஆண்டு விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் சேர்த்து மொத்தமாக 10,349 பேர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவணம் தெரிவித்துள்ளது. பருவமழை ஏமாற்றம், கடன் சுமை, விவசாயத்துக்கு போதிய நிதி இல்லாதது, விளைச்சலில் நஷ்டம், குடும்பச் சுமை போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய தற்கொலைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான் விவசாயத்தை கேள்விக்குறியாக்கும் வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Tags : shops , Will ration shops disappear due to new agricultural bills?
× RELATED சென்னையில் உள்ள 79 பண்ணை பசுமை கடைகளில் நேற்று 5,900 கிலோ வெங்காயம் விற்பனை !