திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 9 வருடமாக இயங்காத கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி: பாசன வாய்க்காலில் கலப்பதால் சுகாதாரகேடு அபாயம்

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 9 வருடமாக கழிநீர் சுத்திகரிப்பு தொட்டி இயங்காததால், பாசன வாய்க்காலில் கலக்கிறது. இதனால் சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் உள்ளது. திருவாரூர் கலெக்டர் அலுவலக பின்புறத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது 2010ம் ஆண்டில் சுமார் ரூ.100 கோடி மதிப்பில் இந்த மருத்துவமனைக்கு கட்டிடம் மற்றும் மருத்துவ கருவிகள் வாங்கப்பட்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி துவங்கப்பட்டது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளி நோயாளிகளாக தினந்தோறும் சுமார் 800 பேர் வரை வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, 500 மாணவர்களை கொண்ட மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி உட்பட 7 இடங்களில் தலா 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் கல்லூரியின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு தொட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இவ்வாறு கல்லூரி மற்றும் மருத்துவமனை துவங்கிய காலத்திலிருந்து ஒருவருட காலம் வரையில் இந்த கழிவுநீர் அனைத்தும் கழிவுநீர் தொட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிப்பு நடைபெற்று வந்தது. அதன் பின்னர் 2011ம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக வழக்கம்போல் திமுகவின் திட்டங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டது.

இந்த மருத்துவமனையும் கேட்பாரற்று போனது. இதன் ஒரு பகுதியாக சுத்திகரிப்பு தொட்டியில் இருந்துவந்த இயந்திரங்கள் அனைத்தும் பழுது ஏற்பட்டதன் காரணமாக கடந்த 9 வருடங்களாக கழிவுநீர் அனைத்தும் சுத்திகரிப்பு தொட்டியில் இருந்து வெளியேறி அருகில் இருந்து வரும் சிங்களஞ்சேரி பாசன வாய்க்கால் மூலமாக வாழவாய்க்கால் ஆற்றில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் கழிவுநீர் இந்த தொட்டியில் இருந்து வெளியேறி, பாசன வாய்க்காலில் கலக்கிறது. இதன் மூலம் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமன்றி தற்போது கொரோனா நோயாளிகளும் இந்த மருத்துவமனையில் இருந்து வரும் நிலையில் அவர்கள் பயன்படுத்தும் கழிவுகளும் கலப்பதால் மிகப்பெரிய அச்சத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் முத்துக்குமரன் கூறுகையில், கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் இருந்து வந்த இயந்திரங்கள் பழுது காரணமாக கழிவு நீரானது சுத்திகரிப்பு செய்ய முடிய முடியாமல் இருந்து வருகிறது. இதற்கு குறைந்தபட்சம் ரூ35 லட்சம் முதல் ரூ50 லட்சம் வரையில் செலவு ஏற்படும் என்ற நிலையில் இதுகுறித்து மருத்துவத் துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டருக்கும் இதுகுறித்து பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், இந்த மருத்துவமனையில் கழிவுநீர் மட்டுமின்றி மருத்துவ கழிவுகள் அனைத்துமே பாதுகாப்பான முறையில் கையாளப்படாமல் மருத்துவமனை வளாகத்திலேயே கொட்டப்படும் நிலை இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி மருத்துவ கழிவுகள் அவ்வப்போது தீவைத்து கொளுத்தப்படுவதால் அதில் இருந்து வெளியேறும் நச்சு புகை அருகில் மருத்துவமனை கட்டிடத்திற்குள் புகுந்து நோயாளிகளை தாக்கும் நிலையும் இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்தி இந்த சுத்திகரிப்பு தொட்டிக்கு தேவையான இயந்திரங்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தின் 6வது வார்டு கவுன்சிலர் திமுகவை சேர்ந்த முருகேசன் கூறுகையில், திமுகவின் திட்டம் என்பதால் இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் தற்போது கேட்பாரற்று உள்ளது. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கழிவு நீர் பாசன வாய்க்காலில் வெளியேறுவதன் மூலமும், அதன் அருகிலேயே இருந்துவரும் காவலர் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த பாசன வாய்க்காலில் கலப்பதன் மூலம் மேப்பலம், பெருந்தரக்குடி, குளிக்கரை, பெருங்குடி, கீழ்படுகை, வேலங்குடி, தியானபுரம் மற்றும் நாகை மாவட்டத்தில் காக்கழனி, இரட்டை மதகடி, தேவூர், வெண்மணி, வண்டலூர் ,பாலக்குறிச்சி, செம்பியன் மகாதேவி, வடுகச்சேரி, வடவேர் உப்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் இந்த கழிவு நீர் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி இந்த ஊர்களில் இருந்து வரும் குளம், குட்டைகளிலும் இந்த கழிவுநீர் கலக்கும் நிலை இருந்து வருவதால் இந்த நீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தோல்வியாதிகள் உட்பட பல்வேறு வியாதிகள் ஏற்படும் நிலை இருந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: