2 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய திட்டம் 8 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணி இழுத்தடிப்பு: குமரி மாவட்ட மக்கள் அவதி

நாகர்கோவில்: நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது மக்கள் தொகை அதிகரிப்பையொட்டி பாதாளசாக்கடை கட்டாய தேவை என்ற நிலைப்பாட்டில் ரூ76.4 கோடி மதிப்பீட்டில் கடந்த மார்ச் 2013ம் ஆண்டு பணி தொடங்கியது. மொத்தம் 52 வார்டுகள் உள்ள நாகர்கோவில் நகராட்சியில் 18 வார்டுகள் முழுவதும், 17ம் வார்டில் பகுதியாக பாதாளசாக்கடை பணி தொடங்கியது. இந்த பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தி வருகிறது. மொத்தம் 118.86 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க தொடங்கிய பணி தற்போது வரை 106 கிலோ மீட்டர் தூரத்திற்கு முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் சுமார் 12 கிலோ மீட்டர் அளவிற்கு பணிகள் முடிக்கவேண்டியுள்ளது. பணி தொடங்கி 8 ஆண்டுகள் ஆகியும் முடியவில்லை. நீதிமன்ற வழக்கு மற்றும், நெடுஞ்சாலைதுறை அனுமதி என சில இடர்பாடுகளால் பாதாளசாக்கடை பணி முடிவடைய காலதாமதம் ஏற்பட்டது.

பாதாளசாக்கடை பணி தொடங்கிய 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு இருந்தால் ரூ52 கோடியை மத்திய அரசு வழங்கி இருக்கும். ஆனால் காலம் கடந்ததால் அந்த நிதியை மாநில அரசு வழங்கியுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாதாளசாக்கடை வழியாக வரும் கழிவுகள் வடிவீஸ்வரம் பரக்கிங்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்பு அங்கிருந்து வலம்புரிவிளை உரக்கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு கழிவுகள் உரமாகவும், நீர் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையை கணக்கில் கொண்டு தினமும் 175 லட்சம் லிட்டர் தண்ணீர் இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் பிரிக்கும் வகையில் 2 பிரமாண்டமான பிளாண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு நிலையம் ரூ17 கோடியிலும், பரக்கின்கால் பகுதியில் கழிவுநீரேற்று நிலையம் ரூ6 கோடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இவை பாதாளசாக்கடை பணிக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் நடந்துள்ளது. கழிவுநீரேற்று நிலையத்தில் மொத்தம் 3 பிளாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. நகர பகுதியில் பாதாளசாக்கடை வழியாக வரும் கழிவுகள் இந்த பிளாண்டுகளில் வந்து, பின்னர் அங்கு தேவையில்லாத பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை அகற்றிவிட்டு, பின்பு  வலம்புரிவிளை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படும். பரக்கிங்கால் பகுதியில் உள்ள கழிவுநீரேற்று நிலையத்தில் இருந்து வலம்புரிவிளையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. வலம்புரிவிளை உரக்கிடங்கு பகுதியில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றியும், பரக்கின்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீரேற்று நிலையத்தை சுற்றியும் சுற்றுசுவர் கட்டப்படவுள்ளது.

இதனை தவிர 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதாளசாக்கடை பணிக்கான குழாய் பதிக்கவேண்டியுள்ளது. இதில் கலெக்டர் அலுவலகம் முதல் பால்பண்ணை வரையும், வெட்டூர்ணிமடம் ஜங்சன் முதல் களியங்காடு சிஎஸ்ஐ சர்ச் வரையும் தேசிய நெடுஞ்சாலையில் பாதாளசாக்கடைக்கான குழாய்கள் பதிக்கும் பணி நடக்கவுள்ளது. இதனை தவிர பறக்கை ஜங்சன் விலக்கில் இருந்து ரயில்வே ரோடுவரையும், பீச்ரோட்டிற்கும் செட்டிகுளத்திற்கும் இடையே சுமார் 80 மீட்டர் நீளத்திற்கும் குழாய்கள் பதிக்கும் பணி நடக்கவுள்ளது. இதுபோல் சிறியசிறிய வேலைகள் நகர பகுதிகளில் நடக்கவுள்ளது. இந்த பணிகள் நடக்கும்போது நகர பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அதிக அளவு ஏற்படவாய்ப்புள்ளது. தற்போது பறக்கை ஜங்சன் விலக்கில் இருந்து ரயில்வே ரோடு வரை பாதாளசாக்கடை குழாய் பதிக்க மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த பணி முடிந்த பிறகு போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் அடுத்த பணிகளுக்கான அனுமதி வழங்கப்படும் என மாவட்ட காவல்துறை கூறியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கின்போது நகர பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் குமரி வருகிறார் என அறிவிப்பு வந்தவுடன் வேலை படுவேகமாக நடந்தது. ஆனால் வருகை ரத்தானவுடன் பணிகள் மிகவும் மந்தகதியில் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பாதாளசாக்கடை பணியை கடந்த 3.2.2020க்குள் முடித்து இருக்க வேண்டும். ஆனால் காலம் கடந்து செல்வதால் திட்ட மதிப்பீடும் உயர்ந்துள்ளது. பாதாளசாக்கடை பணி வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரூ 76 கோடியில் தொடங்கி ரூ 120 கோடியில் நிற்கிறது

நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த 2013ம் ஆண்டு ரூ76.04 கோடியில் பாதாளசாக்கடை பணி தொடங்கியது.  2 ஆண்டில் முடிக்கப்படவேண்டிய பணி நீண்டதால் கடந்த வருடம் திட்டமதிப்பீடு ரூ111 கோடியாக உயர்ந்தது. கடந்த வருடமும் பணி முடியாமல் அடுத்த ஆண்டு முடியும் என கணக்கிடப்பட்டுள்ளதால் மேலும் ரூ9 கோடி உயர்ந்து திட்டமதிப்பீடு ரூ120 கோடியில் போய் நிற்கிறது.

மார்ச் மாதம் முடிவடையும்

பாதாளசாக்கடை திட்டபணிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதாளசாக்கடை குழாய் பதிக்கும் பணி 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து வருகிறது. இதுவரை 106 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கவேண்டியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் குழாய் பதிக்க நிர்வாக பிரச்சனையால் முதலில் அனுமதி கிடைக்கவில்லை. தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இருப்பினும் நாகர்கோவில் நகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு பகுதியாக வேலை செய்யப்பட்டு வருகிறது. ஒரு இடத்தில் பணி முடிந்தபிறகு அடுத்த இடத்தில் தொடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதாளசாக்கடை பணி வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றார்.

மக்கள் நலனில் அரசுக்கு அக்கரையில்லை

நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாளசாக்கடைக்கு திமுக ஆட்சி காலத்தில் திட்டம் தீட்டப்பட்டு பணி தொடங்ககூடிய நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதற்கு பிறகு ஜெயலலிதா ஆட்சியில் 2013ல் பணி தொடங்கப்பட்டது. 2015 டிசம்பரில் பணி முடிந்து இருக்கவேண்டும். ஆனால் 2020 டிசம்பரிலாவது முடிக்கப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. இன்னும் 20 சதவீதம் பணி பாக்கி உள்ளது. இதற்கு நிர்வாக சீர்கேடுதான் காரணம். முக்கியகாரணமாக குடிநீர் வடிகால்வாரியத்தில் பொறியாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. மேலும் திட்டப்பணிக்கான நிதி அரசு ஒப்பந்தகாரருக்கு முறையாக வழங்கப்படவில்லை.

இந்த பணிகள் தொடங்கியது முதல், முறையாக கலெக்டர் தொடர் ஆய்வுகள், ஆய்வு கூட்டங்கள் நடத்தவில்லை. பாதாளசாக்கடை பணி முடிக்கவேண்டிய காலத்தை தாண்டி 5 ஆண்டுகள் கடந்துசெல்கிறது. 5 ஆண்டுகள் காலதாமதத்தால் மக்களின் வரிபணம் வீணாகியுள்ளது. தமிழக முதல்வர் குமரிக்கு வருகிறார் என்றவுடன் பணியில் வேகம் காட்டும் நிர்வாகம், முதல்வர் வருகை ரத்து என்றதும் பணிகளை கிடப்பில் போட்டுள்ளது. மக்களை பற்றி கவலை படாத அரசாக எடப்பாடி அரசு இருப்பது வருத்தத்திற்குரியது. இதனை குமரி மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். பொது தேர்தலில் இதற்கான பதிலை வழங்குவார்கள் என்றார்.

Related Stories: