×

7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா

அபுதாபி: ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  ஷேக் ஜாயேத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். வார்னர், பேர்ஸ்டோ இருவரும் சன்ரைசர்ஸ் இன்னிங்சை தொடங்கினர். பேர்ஸ்டோ 5 ரன் மட்டுமே எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் கிளீன் போல்டானார். அதற்கு முந்தைய பந்தில் ‘ரிவியூ’ கேட்டு தப்பிப் பிழைத்த பேர்ஸ்டோ, நல்ல வாய்ப்பை வீணடித்தார். அடுத்து வார்னருடன் மணிஷ் பாண்டே இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 35 ரன் சேர்த்தனர். பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வார்னர் 36 ரன் எடுத்து (30 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) வருண் சக்ரவர்த்தி சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத் தொடர்ந்து, மணிஷ் பாண்டே - விருத்திமான் சாஹா ஜோடி ஸ்கோரை உயர்த்த முயன்றது.

பொறுப்புடன் விளையாடிய இருவரும் 62 ரன் சேர்த்தாலும், அதிரடியாக ரன் குவிக்கும் முயற்சிகள் பெரிதாக எடுபடவில்லை. அரை சதம் அடித்த மணிஷ் பாண்டே 51 ரன் எடுத்த நிலையில் (38 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ரஸ்ஸல் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட்டு பெவிலியன் திரும்பினார். சாஹா 30 ரன் எடுத்து (31 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ரன் அவுட்டானார். சன்ரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன் குவித்தது. முகமது நபி 11 ரன், அபிஷேக் ஷர்மா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. ஷுப்மான் கில், சுனில் நரைன் இருவரும் துரத்தலை தொடங்கினர். சுனில் நரைன் ரன் ஏதும் எடுக்காமல், கலீல் அகமது பந்துவீச்சில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து ஷுப்மான் கில்லுடன் நிதிஷ் ராணா இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய நிதிஷ் 13 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 26 ரன் சேர்த்திருந்தபோது நடராஜன் பந்தில் சாஹவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

தொடர்ந்து ஷுப்மான் கில்லுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். அவர் 3 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் ராஷித்கான் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். தொடர்ந்து மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி கொல்கத்தா அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இந்நிலையில் 18 ஓவர் முடிவில் 145 ரன்கள் எடுத்த கொல்கத்தா 3 விக்கெட்டுகளை இழந்து, வெற்றி பெற்றது. அப்போது ஷுப்மான் கில் 70 ரன்களுடன் (62 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். மோர்கன் 42 ரன்களுடன் (29 பந்து,3 பவுண்டரி,2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். மேன் ஆப்தி மேட்ச் ஷுப்மான் கில்லுக்கு கிடைத்தது.


Tags : Kolkata ,Hyderabad , Kolkata beat Hyderabad by 7 wickets
× RELATED ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தா அணிக்கு...