×

இந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை அனுப்பும் சீனா: பாகிஸ்தானுடன் சேர்ந்து கூட்டு சதி: ஆயுதங்கள் வழங்கியும் ஊக்குவிப்பு

புதுடெல்லி: குளிர் காலம் தொடங்கும் முன்பாக, ஜம்மு காஷ்மீருக்குள் அதிகளவில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும்படியும், அவர்களுக்கு அதிகளவில் ஆயுதங்களை சப்ளை செய்யும்படியும் பாகிஸ்தானுக்கு சீனா உத்தரவிட்டுள்ள அதிர்ச்சி தகவலை, இந்திய உளவுத்துறைகள் கண்டுபிடித்துள்ளன. இதையடுத்து, எல்லையில் இந்திய பாதுகாப்பு படைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றன.   இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே லடாக் எல்லையில் கடந்த ஜூனில் மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து எல்லையில் இருதரப்பு வீரர்கள் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் எல்லையில் ராணுவத்தை குவித்துள்ளதால் போர் பதற்றம் நிலவி வருகிறது. இருப்பினும், இப்பிரச்னையை தீர்ப்பதற்காக இருநாட்டு ராணுவம் மற்றும் தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதே நேரம், சீனா தனது நரித்தனத்தை காட்டி வருகிறது.

ஏற்கனவே, லடாக் எல்லையில் கல்வான், பாங்காங் திசோ ஏரிப் பகுதியில் இந்தியாவின் 10 கிமீ தூரத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது.   அந்த இடங்களில் இருந்து தனது ராணுவத்தை திரும்பப் பெறாமல், நிலையான ராணுவ கட்டுமானங்களை உருவாக்கி வருகிறது. மறுபுறம், பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை தாழ்த்தி வருகிறது. குளிர்காலம் தொடங்கியதும் எல்லை பகுதியில் தாக்குதல் நடத்த சீனா சதித்திட்டம் தீட்டி இருப்பதாக ஏற்கனவே மத்திய உளவுத்துறைகள் எச்சரித்து வருகின்றனர். அதனால்தான், இந்திய ராணுவமும் முழு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தைரியம், சீனாவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு மேலும் குடைச்சலை கொடுக்கவும், அதன் கவனத்தை திசை திருப்பவும்  புதிய சதியில் சீனா ஈடுபட்டுள்ள தகவலை, இந்திய உளவுத்துறைகள் கண்டுபிடித்துள்ளன. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, இங்கு தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஊடுரும் தீவிரவாதிகள், எல்லையிலேயே கிள்ளி எறியப்படுகின்றனர்.

ஊடுருவி வந்த எஞ்சிய அல்லது உள்ளூரில் சேர்க்கப்பட்ட தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படைகள் தினமும் வேட்டையாடி வருகின்றன. இதனால், இந்த யூனியன் பிரதேசங்களில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால், பாகிஸ்தான் ஏமாற்றம் அடைந்துள்ளது. அதற்கு ஊக்கமளிக்கும் முயற்சியில் சீனா இப்போது ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக, குளிர்காலம் தொடங்கும் முன்பாக ஜம்மு காஷ்மீருக்குள் அதிகளவில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும்படியும், அவர்களுக்கு ஏராளமான நவீன ஆயுதங்களை சப்ளை செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளது. ‘இந்தியா - சீனா பொருளாதார பாதை’ திட்டத்தால், சீனாவிடம் அடிமையாகி விட்ட பாகிஸ்தானும் இதற்கு தலையாட்டி இருக்கிறது. இதற்காக, பாகிஸ்தானுக்கு சீனா ஏராளமான ஆயுதங்களையும் சப்ளை செய்துள்ளது. இவற்றைதான், டிரோன்கள் மூலமாக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அனுப்பி வருகிறது.

கொல்லப்படும் தீவிரவாதிகளிடம் இருந்தும், டிரோன்கள் மூலமாக பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ அனுப்பிய ஆயுதங்களையும் இந்திய படைகள் ஏராளமாக பறிமுதல் செய்துள்ளன. அவை அனைத்தும் சீனாவின் ஆயுத தயாரிப்பு நிறுவனங்களின் முத்திரையை கொண்டுள்ளன. இதன்மூலம், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சீனா ஆயுத சப்ளை செய்வது உறுதியாகி இருக்கிறது.

குளிர்காலத்துக்கு முன்பாக ஏன்?
* எல்லையில் குறிப்பிட்ட சில வனப்பகுதிகளின் வழியாகவே பாகிஸ்தான் தீவிரவாதிகள், ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவுகின்றனர்.
* குளிர்காலத்தில் ஊருடுவல் பகுதிகளில் உள்ள புதர்கள், செடிகொடிகள் பனிப்பொழிவால் அழிந்து விடும். அதனால், தீவிரவாதிகள் மறைவதற்கு பாதுகாப்பான இடம் கிடைக்காது.
* எனவேதான், குளிர்காலத்துக்கு முன்பாகவே ஊடுருவலை முடிக்கும்படி பாகிஸ்தானை சீனா அறிவுறுத்தி உள்ளது.
ராணுவ தளபதி நாரவனே, எல்லைப் பாதுகாப்பு படை தலைவர் ராகேஷ் அஸ்தனா, மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கடந்த பத்து நாட்களில் ஜம்மு காஷ்மீருக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கு, சீனாவின் சதியை பற்றி தெரிந்ததுதான் காரணம்.

பாக். உளவுத்துறை தில்லாலங்கடி
எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகளை வீழ்த்த, இந்திய பாதுகாப்பு படைகள் எப்படிப்பட்ட நடவடிக்கையை எடுக்கின்றன என்பதை நீண்ட காலமாக கண்காணித்து, பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ சில வழிமுறைகளை கண்டறிந்துள்ளது.
* எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் ஆயுதமின்றி வருபவர்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவது இல்லை.
* எனவே, தீவிரவாதிகளை ஆயுதங்களுடன் அனுப்பாமல் எல்லையை தாண்ட வைக்கிறது ஐஎஸ்ஐ.
* பின்னர், அவர்களுக்கு டிரோன்கள் மூலமாக வான்வழியாக ஆயுதங்களை போடுகிறது.
* இதற்காகவே, சீனாவிடம் இருந்து ஏராளமான டிரோன்களை பாகிஸ்தான் வாங்கி குவித்துள்ளது.
*  பாகிஸ்தானில் இருந்து ஊடுருவுவது தற்போது கடினமாகி விட்டதால், ஜம்மு காஷ்மீரிலேயே தீவிரவாதிகளை சேர்க்கும் முயற்சியில் ஐஎஸ்ஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Tags : militants ,China ,India ,Pakistan , China sends militants to divert India's attention: Joint conspiracy with Pakistan: Arms promotion
× RELATED மீண்டும் சீண்டும் சீனா மோடியின் சீனா...