×

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள 15 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 15 மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருகிற 30ம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், 29ம் தேதி காலை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து அன்று பிற்பகல் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

அதற்கு முன்னதாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, கொரோனா தொற்று அதிகமாக உள்ள கோவை, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், திருப்பூர், காஞ்சிபுரம்,  தஞ்சாவூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், நாமக்கல்,  தர்மபுரி, திருவாரூர் ஆகிய 15 மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, தமிழக டிஜிபி திரிபாதி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவ சேவை கழக மேலாண் இயக்குநர் உமாநாத் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம் பேசும்போது, “மாவட்டங்களில் பரிசோதனை மேற்கொண்டு நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.

இறப்பு விகிதத்தை குறைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து அதனை கண்காணிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள், மருந்து மாத்திரைகள் மற்றும் பிற மருத்துவ சாதனங்கள் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த சில நாட்களாக இந்த 15 மாவட்டங்களில் நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.

அதை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணியில் முழு கவனம் செலுத்தி கொரோனா நோய் தொற்று பரவலை தடுத்திட அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை மண்டலத்திற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Secretary ,districts ,Collectors , The Chief Secretary consults with the Collectors of the 15 districts where corona vulnerability has increased
× RELATED குஜராத் மாஜி தலைமை செயலாளருக்கு லோக்பால் உறுப்பினர் பதவி