×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ குறித்து வாட்ஸ்அப்பில் வதந்தி: கிருஷ்ணகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏவின் உடல் நிலை குறித்து வாட்ஸ் அப்பில் பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் எம்எல்ஏவான அதிமுகவை சேர்ந்த சி.வி.ராஜேந்திரன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று முன்தினம் மாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் தகவல் வந்து கொண்டே இருந்தது. இதை பார்த்த அதிமுகவினரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, அது தவறான தகவல் என்றும், வாட்ஸ் அப் குழுக்களில் யாரோ சில விஷமிகள் அதை பரப்பியதும் தெரியவந்தது. இதுகுறித்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சி.வி.ராஜேந்திரன் எம்எல்ஏ கூறுகையில், ‘கொரோனா அறிகுறி இருந்ததால் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். முதலில் காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தன. தற்போது அவை இல்லை. நான் நலமாக உள்ளேன். இன்னும் ஒருசில நாளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவேன்,’ என்றார்.


Tags : AIADMK ,Corona: Sensation ,Krishnagiri , Rumor on WhatsApp about AIADMK MLA affected by Corona: Sensation in Krishnagiri
× RELATED மத்திய அரசு ரூ.1000 வழங்குவதாக வதந்தி:...