×

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு இன்ஸ்பெக்டர் உட்பட 9பேர் மீது9 பிரிவில் சிபிஐ குற்றப்பத்திரிகை: மதுரை நீதிமன்றத்தில் தாக்கல்

மதுரை: சாத்தான்குளம் வியாபாரிகள் இரட்டை கொலை வழக்கில் சிபிஐ தரப்பில், மதுரை நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் உட்பட 9 போலீசார் மீது 9 பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச்சிறையில் இறந்தது தொடர்பாக, ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் உடனடியாக விசாரிக்குமாறு உத்தரவிட்டது. இச்சம்பவத்தில் இரு கொலை வழக்குகள் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோரை கைது செய்தனர். பின்னர் தமிழக அரசு இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றியது. விசாரணையை துவக்கிய சிபிஐ அதிகாரிகள் கைதான அனைவரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். வழக்கிற்கு தேவையான ஆவணங்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றை சேகரித்தனர்.

இந்நிலையில் சிபிஐ தரப்பில் இந்த இரட்டை கொலை வழக்கின் குற்றப்பத்திரிகை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கொரோனாவால்  உடல்நலம் பாதித்து இறந்த எஸ்எஸ்ஐ பால்துரை தவிர்த்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன், சாமத்துரை, போலீசார் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ்பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 9 பேருக்கு  எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் போலீசார் 9 பேர் மீதும், 120பி(கூட்டு சதி), 302(கொலை), 342(உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்துதல்), 201(குற்றவாளியை மறைக்கும் நோக்கத்தில் பொய் சாட்சியம் அளித்தல்), 182(பொய் தகவலை தெரிவித்தல்), 193(பொய் சாட்சியம் அளித்தல்), 211(பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்தல்), 218(தவறான பதிவேட்டை உருவாக்குதல்), 34(கூட்டாக சேர்ந்து செயல்படுதல்) ஆகிய 9 பிரிவுகளின் கீழ் சிபிஐ போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அடுத்த கட்ட விசாரணை தொடர்கிறது.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : CBI ,persons ,Sathankulam ,court ,Madurai ,double murder case inspector , CBI chargesheet in 9 cases against 9 persons, including inspector in Sathankulam double murder case: Filed in Madurai court
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...