கொரோனாவால் பாதிக்கப்படாத நிலையில் தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலித்த வழக்கு: தமிழக மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: மதுரை, ராஜாமில் ரோடு பகுதியைச் சேர்ந்த நேரு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  நானும், எனது மனைவியும் காய்ச்சல் மற்றும் தலைவலி காரணமாக மதுரை வைத்தியநாதபுரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஜூலை 7ல் சிகிச்சைக்கு சென்றோம். இருவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதால்  சிகிச்சைக்கு முன்பணமாக ரூ.8 லட்சம் செலுத்த கூறினர். நாங்கள் கட்டணம் செலுத்தினோம். ஆனால், கொரோனா பரிசோதனை முடிவில் எங்களுக்கு கொரோனா நோய் தொற்று இல்லையென முடிவு வந்தது. இதனால், முன்பணமாக செலுத்திய பணத்தை திரும்ப தருமாறு கேட்டோம். ஆனால், ரூ.1.05 லட்சம் மட்டுமே கொடுத்தனர். பல முறை முறையிட்டும் தர மறுத்து விட்டனர். எனவே, நீதிமன்றம் தலையிட்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்ைக எடுக்கவும், எங்களிடம் வசூலித்த முன்பணத்தை திரும்ப தரவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: மருத்துவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் 2002-ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதில் மருத்துவர்கள் தொழிலில் கண்ணியமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும், மருத்துவ தொழிலில் நன்னடத்தை கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் மோசடி குறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்க மனுதாரருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மனுதாரரின் புகார் மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தகுதி மற்றும் சட்டப்படி விசாரணை நடத்தி 16 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

Related Stories: