×

ஊழியர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 5,300 டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டம்: பணியாளர் சங்கம் எச்சரிக்கை

மதுரை: பணியாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளை அடைத்து, போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத்தலைவர் பாலுசாமி, பொதுச்செயலாளர் ஜி.வி.ராஜா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை: டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் இயங்கும் 5 ஆயிரம் சில்லரை மதுபான கடைகளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் குறைவான தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். 17 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், அதிகபட்சமாக மாதம் ரூ.10 ஆயிரத்துக்குள் பெற்று வருகின்றனர். அரசுக்கு ஆண்டுக்கு ரூ.32 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் பணியாளர்கள், பலவிதமான தாக்குதல்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

 கொரோனாவால் பார்கள் திறக்கப்படவில்லை என்றாலும், பல இடங்களில் அனுமதியின்றி பார்கள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. பார் உரிமையாளர்கள், கடைப்பணியாளர்களை அச்சுறுத்தி, மொத்தமாக மதுப்பாட்டில்களை வாங்கி தனியாக வியாபாரம் செய்து, கலப்படம் செய்தும் கூடுதல் விலைக்கு விற்றும் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். இச்சட்டவிரோத செயலை தட்டிக்கேட்டதால், பல இடங்களில் பணியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமை தமிழகம் முழுவதும் நீடிக்கிறது. குறைவான மாத ஊதியம் பெறும் டாஸ்மாக் பணியாளர்கள் கடை ரீதியான பல்வேறு செலவினங்களை சரிகட்ட எம்ஆர்பியை விட கூடுதல் விலைக்கு விற்பது வாடிக்கையாகி விட்டது.

இதை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள், பணியாளர்களிடம் லஞ்சம் கேட்டு வற்புறுத்துகின்றனர். லஞ்சம் கொடுக்க மறுக்கும் பணியாளர்களை தண்டிப்பது, அவர்களை தாக்கும் நிலைக்கு செல்கின்றனர். இதனை நிர்வாகத்திடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரும், முதல்வரும் தலையிட்டு இப்பிரச்னையை தீர்க்காவிட்டால், 5,300 டாஸ்மாக் கடைகளையும் மூடி, கடையடைப்பு போராட்டத்தை நடத்த 13 சங்கங்கள் அடங்கிய கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.  இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

Tags : Tasmac ,stores , 5,300 Tasmac stores to be closed if no action taken to stop workers 'strike: Employees' union warns
× RELATED டாஸ்மாக் நாளை விடுமுறை