×

கோவிட் அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட கோயில் பணியாளர்கள் மத்திய அரசின் நிதியுதவியை பயன்படுத்தி கொள்ளலாம்: அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: கோவிட் அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட கோயில் பணியாளர்கள் மத்திய அரசின் நிதியுதவியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கால் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதனால், அவர்களுக்கு கடனுக்கான வட்டி மற்றும் மேலும் கடன் தருவது தொடர்பாக பல்வேறு சலுகைகள் மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு சலுகை வழங்கியுள்ளது. அதாவது, 15 ஆயிரத்துக்கு கீழ் வருமானம் வரும் ஊழியர்கள் மத்திய அரசின் நிதியுதவியை பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் அனைத்து கோயில் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதான் மந்திரி காரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் கோவிட்-19 தொற்று காரணமாக பணியாளர்கள் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான 6 மாதங்களுக்கு மாத வருமானம் 15 ஆயிரத்துக்கு கீழ் உள்ள பணியாளர்களின் இபிஎப் மற்றும் இபிஎஸ் பங்கு தொகை மத்திய அரசின் நிதியில் இருந்து செலுத்தப்படும். எனவே, பிரதான் மந்திரி காரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மத்திய அரசின் நிதியுதவிகளை பயன்படுத்தி கொள்ள அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், இத்திட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்படுமாயின் தங்கள் பகுதியில் உள்ள இபிஎப் மற்றும் இபிஎஸ் அலுவலகங்களை தொடர்பு கொள்ள அனைத்து கோயில் அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Temple ,Govt ,Treasury , Temple staff affected by Govt extraordinary circumstances can avail federal funding: Trust Department order
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...