×

விளையாட்டு துளிகள்

முதலில் பேட்டிங் வெற்றி
முதல் வாரத்தில் நடந்த 7 ஆட்டங்களில், முதலில் பேட்டிங் செய்த அணிகளே  6 ஆட்டங்களில் வென்றுள்ளன. ஒரே ஆட்டத்தில் மட்டும்  2வது பேட்டிங் செய்த அணி வென்றுள்ளது. அது மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த  சென்னை வெற்றி பெற்றது. இது வரை நடந்த 12 ஐபிஎல் தொடர்களில் இல்லாத அளவுக்கு நடப்புத் தொடரில் முதல் 7 போட்டிகளில் முதலில் பேட்டிங் செயதவர்கள் வென்றுள்ளனர். இது கடந்த  ஆண்டு முதல் 7 போட்டி களில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளில் வென்றும், 3 போட்டிகளில் தோற்றும் இருக்கின்றன. அதிலும் இந்த வெற்றி, தோல்வி விகிதம் 2014, 2016, 2018ல்  1:6 என தலை கீழாக இருந்துள்ளது.

பறந்த பவுண்டரிகள்
முதல் 7 ஆட்டங்களில்  மொத்தம் 190 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. ஷார்ஜாவில் 18 பவுண்டரிகளும்,  அபுதாபியில் 57பவுண்டரிகளும், துபாயில் 115 பவுண்டரிகளும் விளாசப்பட்டன.

ஷார்ஜாவில் சிக்சர் அதிகம்
நடந்து முடிந்த 7 போட்டிகளில் ஒரு போட்டி மட்டுமே  ஷார்ஜாவில் நடந்துள்ளது. அங்கு நடந்த ராஜஸ்தான்-சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் மட்டும் முந்தைய சாதனையை சமன் செய்யும் வகையில்  33 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. துபாயில் 4 போட்டிகளில் 32 சிக்சர்களும், அபுதாபியில் நடந்த 2 போட்டியில் 25 சிக்சர்களும் அடிக்கப்பட்டன.

கை நழுவிய தருணங்கள்
நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்தது, போதுமான பயிற்சி இல்லாதது, யுஏஇயில் நிலவும் கடுமையான வெப்பம் ஆகியவற்றினால் வீரர்களிடையே சோர்வும், தடுமாற்றமும் வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் இந்த  7 ஆட்டங்களில் 17 கேட்ச்களை தவற விட்டதில் புதிய சாதனையும் நிகழ்ந்துள்ளது. துபாயில் நடந்த ஆட்டங்களில் 13 கேட்ச், அபுதாபி, ஷார்ஜாவில் தலா 2 கேட்ச்கள் கை நழுவியுள்ளன. அவற்றில்  பெங்களூர் அதிகபட்சமாக 2  ஆட்டங்களில் 6 கேட்ச்களும், டெல்லி 2 ஆட்டங்களில் 5 கேட்ச்களையும் பிடிக்காமல் விட்டதால் பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்கின்றனர்.

முதலிலும் முடிவிலும் வேகம்
முதல் 7 போட்டிகளில்  சுழற்பந்து வீச்சாளர்களை விட, வேகப்பந்து வீச்சாளர்களே அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.  சுழலில் 32 விக்கெட்களும், வேகத்தில் 54 விக்கெட்களும் சிதறியுள்ளன. முதல் பவர் பிளேயிலும், கடைசி 5 ஓவர்களிலும் வேகப்பந்து வீச்சாளர்களே அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

Tags : Out of the 7 matches played in the first week, the teams batting first have won 6 matches.
× RELATED ராயல்சை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்