ஐநா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்? சிறப்பு அமர்வில் பிரதமர் மோடி காரசார கேள்வி

ஐக்கிய நாடுகள்: ‘ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக, இந்தியா எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்? ’ என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளார். ஐநா.வின் 75வது ஆண்டு பொதுச்சபை கூட்டம் கடந்த 24ம் தேதி தொடங்கி, வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக, ஐநா. வரலாற்றில் இல்லாத வகையில், முதல் முறையாக உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் வீடியோ மூலமாக இதில் உரையாற்றி வருகின்றனர். ஐநா. பொதுச்சபையின் விவாத கூட்டத்தில் கடந்த 22ம் தேதி உரையாற்றிய பிரதமர் மோடி, ஐநா. சபையில் விரிவான சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில், ஐநா பொதுச்சபை உருவாக்கப்பட்ட 75வது ஆண்டு சிறப்பு அமர்வில், மோடியின் பதிவு செய்யப்பட்ட வீடியோ உரை நேற்று வெளியிடப்பட்டது. அதில், மோடி கூறியதாவது: இந்தியா பலவீனமாக இருந்த போதும், உலக நாடுகளுக்கு பாரமாக இருந்தது இல்லை.

தற்போது, வலுவான நாடாக உயர்ந்துள்ள நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தவும் இல்லை. ஐநா.வின் 50க்கும் மேற்பட்ட அமைதிப் பணிகளுக்கு இந்தியா தனது வீரர்களை அனுப்பி உள்ளது. இதனால், அதிகளவிலான வீரர்களை இழந்துள்ளது. ஐநா.வில் இந்தியாவின் பங்களிப்பை பார்க்கும் ஒவ்வொரு இந்தியரும் ஐநா.வில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் கிடைப்பதை ஆவலுடன் எதிர் பார்த்துள்ளனர். ஆனால், ஐநா தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வர வேண்டும். ஐநா.வின் இந்த சீர்திருத்த மாற்றங்களுக்காக இந்தியா காத்து கொண்டிருக்கிறது. ஐநா. அமைப்பில் பொருளாதார தடை உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்டது பாதுகாப்பு கவுன்சில். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இதில் 4 முக்கிய நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்கு உள்ளது.

இந்தியா, இதற்கு முன்பு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 7 முறை தற்காலிக உறுப்பினர் நாடாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. தற்போது, அடுத்தாண்டு ஜனவரி முதல் தற்காலிக உறுப்பினர் நாடாக பணியாற்ற மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் நாடாக இடம்பெற இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்? இன்னும் எத்தனை காலத்துக்கு இதில் இருந்து இந்தியா விலக்கி வைக்கப்பட்டு இருக்கும்? இவ்வாறு மோடி பேசினார்.

கொள்கை ஒன்றே...

பிரதமர் மோடி தனது உரையில் மேலும் கூறுகையில், ஐநா.வின் கொள்கைகளும், இந்தியாவின் கொள்கைகளும் ஒன்றாக உள்ளன. உலகம் ஒரு  குடும்பம் என்ற ஐநா.வின் கொள்கையை உணர்த்துவதே இந்தியாவின் `வசுதேவ குடும்பகம்’ என்ற வாசகம். இது எத்தனையோ முறை இந்த ஐநா பொதுச் சபையில்  ஒலித்துள்ளது. இந்தியா எப்போதும் உலக நலனை கருத்தில் கொண்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: