×

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் ஊழல் கிசான் திட்டத்தில் 10 ஆயிரம் வட மாநிலத்தவர்கள் விவசாயிகள் என்ற பெயரில் முறைகேடாக சேர்ப்பு: 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் புரோக்கர்கள் கைவரிசை

சேலம்: தமிழகத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் வட மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேரை புரோக்கர்கள் போலியாக சேர்த்து உதவித்தொகை பெற்றுத்தந்துள்ளது அம்பலமாகியுள்ளது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6 ஆயிரம் வழங்கும், பிரதமரின் கிசான் உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் போர்வையில் போலியான நபர்களை, தமிழகம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சேர்த்து முறைகேடு செய்துள்ளனர். இந்த முறைகேடு புகார் முதலில் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் எழுந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், சேலம், நாகை, திருவள்ளூர், பெரம்பலூர், கன்னியாகுமரி என மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் முறைகேடாக பயனாளிகள் சேர்க்கப்பட்டு, 2 தவணையாக ₹4 ஆயிரம் உதவித்தொகையை வழங்கியிருப்பது தெரியவந்தது.

முறைகேடு புகார் பெரிய அளவில் எழுந்தவுடன், சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. இதன்பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்துறை இணை இயக்குநர் புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் அதிகாரிகள், தற்காலிக ஊழியர்கள், தனியார் கணினி மையத்தினரை கைது செய்து வருகின்றனர். மேலும், துறை ரீதியாக முறைகேடாக வழங்கப்பட்ட பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கையை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வருகிறது. இந்த வகையில் மாநிலம் முழுவதும் இதுவரையில், முறைகேடாக வழங்கப்பட்ட 72 கோடி மீட்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை முறைகேட்டில் ஈடுபட்டதாக 51 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேளாண்துறை அதிகாரி அன்பழகன், அவரது டிரைவர் பிரகாஷ், தனியார் கணினி மைய ஊழியர்கள் 3 பேர் என 5 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கிசான் உதவித்தொகை திட்டத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை போலியாக சேர்த்து உதவித்தொகை பெற்றுத்தந்துள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகை, கன்னியாகுமரி என மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் வட மாநிலத்தவர்கள், போலி பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 2 தவணையாக 4 ஆயிரம் உதவித்தொகை வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.புரோக்கர்கள் உதவியுடன் பீகார், ராஜஸ்தான், கொல்கத்தா, ஒடிசா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட 19 மாநிலங்களை சேர்ந்த நபர்கள், முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், தமிழகத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், அவர்களின் பெயரில் நிலம் இருப்பதாகவும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தந்த மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கி, உதவித்தொகை வழங்க பரிந்துரைத்துள்ளனர். அதன்அடிப்படையில் வங்கிகள் மூலம் அவர்களின் கணக்கிற்கு உதவித்தொகை இரண்டு தவணையாக செலுத்தப்பட்டிருக்கிறது.

முறைகேடாக சேர்ந்த வட மாநிலத்தவர்கள் பட்டியலை எடுக்கும் பணியில், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது. இவர்களிடம் தலா 1000 முதல் 2000 வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிகாரிகள் துணை போயுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால், கிசான் முறைகேடு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சேலம் மாவட்டத்தில் நடந்த முறைகேடு பற்றி கலெக்டர் ராமன் கூறுகையில், ‘‘மாவட்டம் முழுவதும் 18 ஆயிரம் பேர் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், நேற்று முன்தினம் வரையில் சுமார் 10 ஆயிரம் பேரிடம் இருந்து ₹3.15 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கனரா வங்கி கணக்கில் 35 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது. சேலத்தில் முறைகேடு செய்தவர்களில் 1,234 பேர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். 19 மாநிலங்களை சேர்ந்த இவர்களை புரோக்கர்கள் சேர்த்து விட்டுள்ளனர். அந்த நபர்கள் குறித்து விசாரித்து வருகிறோம். விவசாயிகள் போர்வையில் சேர்ந்த வட மாநிலத்தவர்களிடம் இருந்து 40 லட்சத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

விழுப்புரத்தில் மேலும் ஒருவர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் போலியான விவசாயிகளை சேர்த்து பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தன. இதுவரை 40 ஆயிரம் பேர் வங்கி கணக்கில் இருந்து ரூ.12 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை, முறைகேட்டில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், செஞ்சி அருகே நெகனூரை சேர்ந்த லோகநாதன்(35) என்பவரை நேற்று கைது செய்தனர். இவர், கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மையத்தின் மூலம் சுமார் 3 ஆயிரம் பேரை போலியாக சேர்த்து உதவித்தொகை பெற்று தந்துள்ளார். கைது செய்யப்பட்ட லோகநாதன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Northerners ,Kisan ,districts ,Tamil Nadu , 10 thousand Northerners in the name of farmers in the corrupt Kisan scheme that is taking shape in Tamil Nadu: Brokers in more than 15 districts
× RELATED விவசாயிகளின் எந்த எதிர்பார்ப்பையும்...