×

வட மாநிலங்களில் கனமழையால் விளைச்சல் பாதிப்பு மளிகைபொருட்களின் விலை 30% அதிகரிப்பு: வியாபாரிகள் தகவல்

சேலம்: இந்தியாவில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் துவரம் பருப்பு, கொண்டைக்கடைல, மஞ்சள், மிளகாய், சீரகம், மிளகு, கசகசா, வெந்தயம், கொத்தமல்லி, கடலைப்பருப்பு, பச்சைப்பயிர் உள்பட பல்வேறு தானிய வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது. குஜராத், ராஜஸ்தான் பகுதியில் பூண்டும் சாகுபடியாகிறது. ஆந்திராவில் குண்டூர், நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மிளகாயும், கர்நாடகாவில் அரிசி, புளி, பெரிய வெங்காயமும் சாகுபடி செய்யப்படுகிறது.இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் தானிய வகைகள், இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் தானிய வகைகள் உள்பட உணவுப்பொருட்கள் விற்பனைக்கு வரும். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனாவால் வட மாநிலங்களில் இருந்து 60 சதவீத பொருட்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தது.

அதன்பிறகு சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மளிகைப்பொருட்களின் வரத்து குறைந்தது. இந்த நிலையில் கடந்த இரு மாதமாக ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து ஜவ்வரிசி, அரிசி, இரும்புக்கம்பி, முட்டை, மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்கள் வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோல் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தானிய வகைகள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வட மாநிலங்களில் மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக விளை நிலங்களில் மழைநீர் தேங்கி தானிய வகைகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வட மாநிலங்களிலிருந்து  தமிழகத்திற்கு வரவேண்டிய மளிகைப்பொருட்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மளிகைப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த மளிகை வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் மளிகைப்பொருட்களின் தேவையை 75 சதவீதம் வட மாநிலங்கள் பூர்த்தி செய்கிறது. வட மாநிலங்களில் உணவுப்பொருட்களின் விளைச்சல் குறைந்ததால், தமிழகத்திற்கு வரவேண்டிய தானிய வகைகளின் வரத்து குறையும். அப்போது உணவுப்பொருட்களின் விலைவாசி உயரும். இந்நிலையில் கடந்த இரு மாதத்திற்கு மேலாக மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக மழை பொழிவு தந்துள்ளது.இதன் காரணமாக இந்த மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் மழைநீரில் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 30 முதல் 49 சதவீத பயிர்கள் நாசமாயின. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசன் முடிந்து, மழைக்காலத்தில் இருப்பில் இருக்கும் மளிகைப்பொருட்களை வியாபாரிகள் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள் விற்பனைக்கு அனுப்பவார்கள். நடப்பாண்டு வட மாநிலங்களில் பெய்த கனமழையால் அங்கிருந்து வழக்கமாக வரவேண்டிய மளிகைப்பொருட்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் அனைத்து தானிய வகைகள் உள்பட மளிகைப்பொருட்களின் விலை 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 90க்கு விற்ற துவரம் பருப்பு 100 எனவும், 110க்கு விற்ற உளுத்தம் பருப்பு  130 எனவும்,  60க்கு விற்ற கொண்டைக்கடலை  70 எனவும், 130க்கு விற்ற கொத்தமல்லி  160 எனவும்,  170க்கு விற்ற மிளகாய்  200 எனவும், 80க்கு விற்ற கடலை பருப்பு  90 எனவும்,  70க்கு விற்ற பச்சைப்பயிர் 80 எனவும், 55க்கு விற்ற கொள்ளு ₹ 60 எனவும்,  90க்கு விற்ற பொட்டுக்கடலை  100 எனவும்,  400க்கு விற்ற மிளகு  450 எனவும் உயர்ந்துள்ளது. இதேபோல் மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.வழக்கமாக இந்த சீசனில் மளிகைப்பொருட்கள் வரத்து குறையும். அப்போது 5 முதல் 10 சதவீதம் விலை உயருவது வழக்கம். நடப்பாண்டு மழை காரணமாக மளிகைப்பொருட்களின் வரத்து குறைந்ததால் 20 முதல் 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தற்காலிகம் தான். மளிகைப்பொருட்கள் அதிகமாக வரும்போது தானாக விலை சரியும்.இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

தமிழகத்தில் மளிகைப்பொருட்களின் தேவையை 75 சதவீதம் வட மாநிலங்கள் பூர்த்தி செய்கிறது. வட மாநிலங்களில் உணவுப்பொருட்களின் விளைச்சல் குறைந்ததால், தமிழகத்திற்கு வரவேண்டிய தானிய வகைகளின் வரத்து குறையும். அப்போது உணவுப்பொருட்களின் விலைவாசி உயரும்.

Tags : states , Yields affected by heavy rains in northern states 30% increase in groceries: Traders Information
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்