×

ஐநா.வில் பாக். பிரதமர் இம்ரான் பேச்சு ‘ஆவேசமான இடைவிடா உளறல்’ என இந்தியா கடும் கண்டனம்

வாஷிங்டன்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா. பொதுச்சபையில் பேசியதை ‘ஆவேசமான இடைவிடா உளறல்’ என்று இந்தியா வர்ணித்துள்ளது. உலகிற்கு அவரால் எந்த ஒரு அறிவார்த்தத் தீர்வையும் வழங்க முடியவில்லை. அவரது பேச்சு, ‘பொய்கள், தவறான தகவல்கள், போர் ஆவேசம் மற்றும் தீங்கு விளைவிக்கும் தன்மைகளுடன் விளங்கின’ என்று இந்தியா விமர்சனம் செய்தது.

இந்தியாவுக்கான ஐநா குழுவின் முதன்மைச் செயலர் மிஜிதோ வின்ட்டோ கூறுகையில், “இந்த மிகப்பெரிய ஐநா கூட்டத்தில் பாகிஸ்தான் பயன்படுத்திய வார்த்தைகள் ஐநாவின் சாராம்சத்தை அர்த்தமழிப்பு செய்வதாக உள்ளது. மத்திய கால நம்பிக்கைகளில் அமிழ்ந்து கிடக்கும் ஒரு தேசம் நவீன நாகரீக சமூகத்தின் விழுமியங்களான அமைதி, உரையாடல், பேச்சுவார்த்தை போன்றவை மிகவும் தொலைவில் உள்ளவையாகும்.” என்று கடுமையாக விமர்சித்தார்.

இம்ரான் கான் உரையாற்றுகையில், இந்தியா எப்படி சிறுபான்மையினரை நடத்துகிறது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் அதன் பிறகான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் வைத்தார். காஷ்மீர் விவகாரத்தைத் தீர்க்காமல் தெற்காசியாவில் அமைதி ஏற்படுவது கடினம், சர்வதேச சட்டத்திட்டங்களின் படி காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பேசினார். இதுதான் இந்தியாவுக்கு எரிச்சல் ஏற்படுத்த, அவர் பேச்சை, ‘இடைவிடா ஆவேச உளறல்’ என்று வர்ண்த்துள்ளது.

இம்ரான் கான் தன் உரையை தொடங்கியவுடனே எதிர்ப்பு தெரிவித்து வின்ட்டோ வெளிநடப்பு செய்தார். பிறகு இந்தியத் தரப்பு பதில் கூரியதாவது, நான் மிகவும் உரக்கவும் தெளிவாகவும் கூறி விடுகிறேன். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, எனவே அங்கு கொண்டு வந்த சட்டப்பூர்வ மாற்றங்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகும். காஷ்மீரைப் பொறுத்தவரை மீதமுள்ள தகராறு பாகிஸ்தானின் சட்ட விரோத ஆக்ரமிப்புப் பகுதியே ஆகும்.  எனவே சட்ட விரோத ஆக்ரமிப்பைக் கைவிட்டு அங்கிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்.

பாகிஸ்தானில்தான் இந்துக்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள் ஆகிய சிறுபான்மையினரை அழித்து வருகிறது. தனது தெய்வ நிந்தனை சட்டங்கள் மூலம் இவர்களை தண்டித்து வருகிறது. கட்டாய மதமாற்றம் செய்கிறது என வின்ட்டோ ஆவேசமாக கூறினார். இம்ரான் கான் தனது உரையில், உலகம் முழுதும் பரவி வரும் இஸ்லாமிய விரோதம் பற்றி குறிப்பிட்டார். இந்தியாவில் அரசே தூண்டி விட்டு இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்களை வஞ்சிக்கும் விரோதம் இருப்பதாக இம்ரான் பேசினார்.

இதற்கு பதில் அளித்த வின்ட்டோ, “இஸ்லாமியத்தின் சாம்பியன் என்று பேசும் இந்த நாடுதான் சக இஸ்லாமியர்களைக் கொல்ல ஊக்கம் அளித்து வருகிறது. ஏனெனில் அந்த முஸ்லிம்கள் இன்னொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அண்டை நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டுகிறது. பாகிஸ்தான் ஒரு இயல்பான நாடாக மாற வேண்டுமெனில் அது பயங்கரவாத ஆதரவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று  வின்ட்டோ தெரிவித்தார்.


Tags : Bagh ,Imran ,UN. India ,speech , Bagh at the UN. India strongly condemns Prime Minister Imran's speech
× RELATED ஜம்மு காஷ்மீரில் பாக். டிரோன் வீழ்த்தப்பட்டது