மதுரையில் ரவுடிகளின் சமாதியில் வாள், கத்தி ஆயுதங்களுடன் சபதம்: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

மதுரை: மதுரையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகளின் சமாதியில், வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன், 3 ரவுடிகள் சபதம் எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மதுரை, வரிச்சூரைச் சேர்ந்த முத்து இருளாண்டி, மதுரை, காமராஜர் நகரை சேர்ந்த கார்த்திக் என்ற சகுனி கார்த்திக் ஆகியோர், 2018, மார்ச் 3ம் தேதி மதுரை கூடல்புதூர் சிக்கந்தர் சாவடியில் தங்கியிருந்தனர். அப்போது ரவுடிகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் செல்லூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சுட்டதில் ரவுடிகள் இருவரும் ‘என்கவுன்டர்’ செய்யப்பட்டனர்.இவர்களது உடல்களை மதுரை கீரைத்துறையில் அடக்கம் செய்து சமாதியாக கட்டி உள்ளனர். கடந்த 25ம் தேதி 3 ரவுடிகள், இந்த சமாதியில் வாள், கத்திகளை வைத்து சபதம் எடுத்துள்ளனர்.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘மதுரையில் சில மாதமாக ரவுடிகள் போஸ்டர் ஒட்டுவது, பட்டாக்கத்திகள் மூலம் கேக் வெட்டுவது உள்ளிட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை தடுக்க வேண்டும்’’ என்றனர்.இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘‘மதுரை கீரைத்துறை பகுதியில் உள்ள சமாதியில், வாள், கத்திகளுடன் சுற்றி திரிந்த 3 பேர் சமாதியில் சபதம் எடுத்துள்ளனர். இந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். ஏற்கனவே அவர்களின் கூட்டாளி வெள்ளைகாளி உள்பட 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். இதில் தப்பிய சிலரையும் தேடி வருகிறோம்’’ என்றனர்.

Related Stories: