×

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக 6 மாதத்திற்கு பிறகு தயாராகும் பள்ளிகள்: ஆயத்த பணிகள் தொடக்கம்

சேலம்: கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளிகள், 6 மாதத்திற்கு பிறகு மாணவர்களுக்காக தயாராகி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மூட கடந்த மார்ச் 25ம் தேதியன்று உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை என்றாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வரும் 1ம் ேததி முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கி நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், தங்களது பெற்றோரின் அனுமதியுடன் பாடம் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு வரலாம். மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒரு பிரிவினரும், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மற்றொரு பிரிவினரும் பள்ளிக்கு வர வேண்டும். இதேபோல், ஆசிரியர்களும் இருபிரிவாக பிரித்து சுழற்சி முறையில் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து 6 மாதத்திற்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், அவர்களுக்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நேற்றே பல பள்ளிகளில் தூய்மை பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. சேலம் மூங்கப்பாடி பள்ளியில் ஒவ்வொரு வகுப்பறையாக தூய்மை செய்யும் நடவடிக்கையில் தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டனர். தொடர்ந்து, மாணவர்களுக்கான மின்சார வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Tags : Schools , Schools preparing for 10th, 11th, 12th grade students after 6 months: Preparatory work begins
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...