×

சென்னை அணிக்கு 2வது தோல்வி: பிரித்வி ஷா அதிரடி அரைசதம்

துபாய்: ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசியது. டெல்லி தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கினர். தவான் வழக்கத்தை விட பொறுமையாக விளையாட, மறுமுனையில் பிரித்வி ஷா வேகமாக ரன் சேர்த்தார். ஸ்பின்னர்கள் பியுஷ் சாவ்லா, ஜடேஜா பந்துவீச வந்த பின்னர் இருவருமே அதிரடியில் இறங்க டெல்லி ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

பிரித்வி  தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.4 ஓவரில் 94 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. தவான் 35 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சாவ்லா சுழலில் எல்பிடபுள்யு ஆனார். 35 பந்தில் அரை சதம் அடித்த பிரித்வி 64 ரன் (43 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி, சாவ்லா சுழலில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பன்ட்  கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தது. நிலைத்து நின்று விளையாடினாலும், இவர்களால் சிக்சர் அடிக்க முடியாததால் டெல்லி ஸ்கோர் மளமளவென உயரவில்லை. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர்.

ஷ்ரேயாஸ் 26 ரன் எடுத்து (22 பந்து, 1 பவுண்டரி) சாம் கரன் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. ரிஷப் பன்ட் 37 ரன் (25 பந்து, 5 பவுண்டரி), மார்கஸ் ஸ்டாய்னிஸ் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் சாவ்லா 2, சாம் கரன் 1 விக்கெட் வீழ்த்தினர். கரன் 4 ஓவரில் 27 ரன் விட்டுக் கொடுத்ததுடன் 1 விக்கெட்டையும் கைப்பற்றி சிறப்பாக செயல்பட்டார். ஜடேஜா 4 ஓவரில் 44 ரன் வாரி வழங்கினார். சாஹர் பந்துவீச்சும் அவ்வளவாக எடுபடவில்லை. டெல்லி இன்னிங்சில் மொத்தம் 2 சிக்சர் மட்டுமே அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதைத் தொடர்ந்து, சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. முரளி விஜய், ஷேன் வாட்சன் இருவரும் துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 23 ரன் சேர்த்தது.

வாட்சன் 14 ரன் எடுத்து அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஹெட்மயர் வசம் பிடிபட்டார்.  இந்த அணியில்  டு பிளெஸ்ஸி அதிகபட்சமாக 43 ரன்கள் (35 பந்து, 4 பவுண்டரி) எடுத்தார். இதுபோல் ஜாதவ் 26 ரன்கள் (21 பந்து, 3 பவுண்டரி), தோனி 15 ரன்கள் (12 பந்து, 2 பவுண்டரி) எடுத்தனர். இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்து இந்த அணி தோல்வியை தழுவியது.  டி20 லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கெனவே ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்துள்ளது. நேற்று, டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியை தழுவியது. எனவே, டி20 லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சுக்கு கிடைத்த 2வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Prithviraj Shah Action Fifty , 2nd defeat for Chennai team: Prithvi Shah Fifty in action
× RELATED டெல்லி அணியின் அசத்தல் பந்துவீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் பரிதாப தோல்வி