பாடும் நிலாவை இழந்தது இசை வானம்: திரையுலகினர் இரங்கல்

ரஜினிகாந்த்: இன்று ஒரு மோசமான நாள். கடைசி நிமிடம் வரைக்கும் உயிருக்கு போராடி நம் எஸ்.பி.பி நம்மை விட்டு பிரிந்து விட்டார். மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவரது குரலுக்கும், பாட்டுக்கும் ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இருக்க மாட்டார்கள். அவருக்கு தெரிந்தவர்கள் அவரது குரலை விட பாட்டை விட அவரை நிறைய நேசித்தார்கள். அதற்கு காரணம் அவரது மனித நேயம். கமல்ஹாசன்: வெகு சில பெரும் கலைஞர்களுக்கே அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களின் திறமைக்கு ஏற்ப பெரும் புகழ் கிடைக்கும். அப் புகழ் கிடைக்கப் பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். நாடு தழுவிய புகழ் மழையில் நனைத்தபடியே அவரை வழியனுப்பி வைத்த அவரின் அத்தனை ரசிகர்களுக்கும், அவர்களில் ஒருவனான என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அவர் நனைந்த மழையில் கொஞ்சத்ைத நானும் அனுபவிக்க அனுமதித்த அண்ணனுக்கு நன்றி. அவரின் குரல் பதிப்பின் நிழலாக வெகு காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேரு. பல மொழிகளில் நான்கு தலைமுறை திரை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர். ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் பாடும்.

இளையராஜா: சீக்கிரம் எழுந்து வா, உன்னை பார்க்க நான் காத்திருக்கேன்னு சொன்னேன். நீ கேக்கல... போயிட்ட, எங்கே போன, கந்தர்வர்களுக்காக பாட போயிட்டியா, இங்க உலகம் ஒரு சூன்யமாப்போச்சு. உலகத்துல ஒண்ணும் எனக்கு தெரியல. பேசுறதுக்கு பேச்சு வரல, சொல்றதுக்கு வார்த்தை இல்ல. என்ன சொல்றதுன்னே தெரியல. எல்லா துக்கத்துக்கும் ஒரு அளவிற்கு. இதுக்கு அளவில்ல. வைரமுத்து: மறைந்தனையோ மகா கலைஞனே. சுரப்பதை நிறுத்திக் கொண்டதால் உன் ெதாண்டை அமுதம், காற்று வெளியை கட்டிப்போட்ட உன் நாவை ஒட்டிப் போட்டதா மரணப் பசை. பாட்டு குயில் போனதென்று காட்டு குயில்கள் கதறுகின்றன. ஒலிப்பதிவு கூடங்கள் எல்லாம், ஓசை கொன்று எழுந்து நின்று மவுனம் அனுஷ்டிக்கின்றன. மனித குலத்தின் அரை நூற்றாண்டின் மீது ஆதிக்கம் செலுத்தியவனே, மண் தூங்க பாடினாய், மலர் தூங்க பாடினாய், கண் தூங்க பாடினாய், கடல் தூங்க பாடினாய், நீ தூங்க ஒரு தாலாட்டை எவர் பாடியது. மனிதன் பாடவியலாது என்று மரணம் பாடியதோ.

மோகன்லால்: இசை உலகின் உண்மையான பேரிழப்பு. இதயம் உடைந்து போனது. ஆன்மா சாந்தி அடையட்டும். மகேஷ்பாபு: எஸ்.பி.பி இனி இல்லை என்கிற உண்மையை நம்பமுடியவில்லை. அவரின் ஆத்மார்த்தமான குரலுக்கு அருகில் எதுவும் வர முடியாது. அமைதியாக ஓய்வெடுங்கள், உங்கள் பெருமை வாழும். பாடகி சித்ரா: ஒரு சகாப்தம் முடிந்து விட்டது. சிறந்த பாடகியாக என்னை வழிநடத்தியதற்கு அவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. நீங்கள் இல்லாமல் எந்த சிறப்புகளும் இல்லை. நீங்கள் இல்லாத இசை மேடைகளை நினைத்துகூட பார்க்க முடியவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ்: எஸ்.பி.பியின் மறைவு செய்தி கேட்டு கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயம் போன்று என் இதயமும் வெடித்து சிதறி விட்டது. அவரது பாடல்களால் மட்டுமே அவரை மீண்டும் அழைத்து வர முடியும்.

சல்மான்கான்: எஸ்.பி.பிமறைவு செய்தி கேட்டதும் இதயம் உடைந்து விட்டது. மறக்க முடியாத உங்களின் இசை வழியாக நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். சிரஞ்சீவி: இசை உலகின் கருப்பு நாள். எஸ்.பி.பியின் மறைவு மூலம் ஒரு இசை சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. எனது வெற்றிகளுக்கு எஸ்.பி.பியின் குரலும் ஒரு காரணம் என்பதை நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன். கண்டசாலாவுக்கு பிறகு தெலுங்கு இசை உலகை நிரப்பியவர் அவர். அவரால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை மீண்டும் அவர் வந்துதான் நிரப்ப முடியும். இசையின் மூலம் இந்திய கலாச்சாரத்தின் எல்லையை விரிவுபடுத்தியவர். லதா மங்கேஷ்கர்: எஸ்.பி.பியுடன் இணைந்து பல பாடல்களை பாடி உள்ளேன், இசை  நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அவை இப்போது நினைவுக்கு  வருகிறது. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.

எஸ்.பி.பியின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் ஆண்டனி, வித்யா சாகர், தமன், அனிருத், சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் சிவகுமார், விக்ரம், ஆமிர்கான், அக்‌ஷய்குமார், சிவகார்த்திகேயன், வடிவேலு, விவேக், மம்மூட்டி, நானி, சுதீப், புனித் ராஜ்குமார், சத்யராஜ், ஜூனியர் என்.டி.ஆர் விஜய்சேதுபதி, கார்த்தி, சூர்யா, நடிகைகள் நயன்தாரா, சுஹாசினி, ராதிகா, குஷ்பு, ஹன்சிகா, இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, பாடகிகள் எஸ்.ஜானகி, பி.சுசீலா உள்ளிட்ட பலர் இரங்கல் ெதரிவித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

Related Stories: