ஊரடங்கு தளர்வு காலத்தில் மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள பிறவி குறைபாடு நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மையத்தை விரிவுபடுத்தும் பணி நடைபெற்றது. இதனை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  பிறவி குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக அனைத்து பிரிவுகளை சேர்ந்த மருத்துவர்களும் இந்த மையத்தில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குழந்தைகள் விரும்பும் வகையில் இந்த மருத்துவ மையம் உள்ளது. கீழ்ப்பாக்கத்தை தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் இந்த சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.59 லட்சம் செலவில் இந்த மையம்  அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 34 மையங்கள் இதுபோல் செயல்பட்டு  வருகின்றன.

இவற்றில் தமிழகம் முழுவதும் 43,070 பேர் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 11,715 பேருக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு காலத்தில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும். இதில் எந்த அலட்சியமும் மக்கள் காட்ட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி, நிலைய மருத்துவ அலுவலர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: