இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் நாடு முழுவதும் 15 லட்சம் கொரோனா பரிசோதனை: 47.5 லட்சம் பேர் குணமாகினர்

புதுடெல்லி: நாடு முழுவதும் இதுவரை இல்லாத வகையில் மிகவும் அதிகப்பட்சமாக ஒரேநாளில் 15 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து, மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 81,117 பேர் குணமடைந்து உள்ளனர். நாடு முழுவதும் சிகிச்சை பெற்று மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 47,56,164 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களை காட்டிலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

தேசிய அளவில் குணமடைந்தோர் சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தற்போதைய தரவுகளின்படி 81.74 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ஒடிசா, டெல்லி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாமில் 73 சதவீதம் பேர் குண்மடைந்துள்ளனர்.  மகாராஷ்டிராவில் புதிதாக 19 ஆயிரம் பேர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் 7000த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நோய் பாதித்த 1141 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் இதுவரை இல்லாத வகையில், 14 லட்சத்து 92 ஆயிரத்து 409 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தம் 6 கோடியே 89 லட்சத்து 28 ஆயிரத்து 440 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: