பசுமை தீர்ப்பாய உத்தரவை மீறி எண்ணூர் முகத்துவார ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு: வாழ்வாதாரம் பாதிப்பதாக மீனவர்கள் குற்றச்சாட்டு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட எண்ணூரில் தாழங்குப்பம், நெட்டுகுப்பம், காட்டு குப்பம் போன்ற பல மீனவ கிராமங்கள்  உள்ளன. இங்குள்ள மீனவர்கள் எண்ணூர் முகத்துவார ஆற்றில் மீன், இறால், நண்டு போன்றவைகளை பிடித்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் இருந்தது வெளியேறும் கழிவுகள் இந்த முகத்துவார ஆற்றில்  நேரடியாக விடப்படுகிறது. இதில், ரசாயனமும் கலந்து வருவதால் முகத்துவார ஆறு மாசடைந்து மீன், இறால், நண்டு போன்றவை செத்து  மிதக்கின்றன.இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி வருகிறது. மேலும், ஆற்றில் இறங்கி நண்டு, இறால் போன்றவற்றை பிடிக்கும்  மீனவர்களுக்கு தோல் வியாதி, அரிப்பு போன்றவையால் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளை சுத்திகரிக்காமல் முகத்துவாரத்தில் விடக்கூடாது என்று மீனவர்கள், சமூக நல  அமைப்புகள் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனாலும், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தொடர்ந்து ரசாயன கழிவுகள் முகத்துவார காற்றில் கலந்து,  தண்ணீர் நஞ்சாக மாறி வருகிறது.இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘முகத்துவார ஆற்றை நம்பி ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆற்றில்  தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதால் ஆற்றுநீர் மட்டுமன்றி கடல் நீரும் மாசடைந்து கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

கழிவுகளை நேரடியாக ஆற்றில் விடக்கூடாது என்று நீதிமன்றம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயம் போன்ற பல்வேறு அமைப்புகள் தடை  விதித்துள்ளன. ஆனால், தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் கழிவுகள் முகத்துவாரத்தில் விடப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட  ஆட்சியர், தொழிற்சாலை ஆய்வாளர்கள், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.இதனால், தொழிற்சாலை கழிவுகள் தொடர்ந்து முகத்துவார ஆற்றில் விடப்படுகிறது. ஏற்கனவே வருவாய் இன்றி வறுமையில் வாடும் மீனவ  குடும்பங்கள் இதுபோன்ற தொழிற்சாலைகளில் அத்து மீறல்கள் மற்றும் அதிகாரிகள் அலட்சியத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை உள்ளது,’’  என்றனர்.

Related Stories:

>