இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கே அதிகாரம் ஓபிசி விவகாரத்தில் மருத்துவ கவுன்சில் நழுவல்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஓபிசி பிரிவினருக்கு 50சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை மத்திய அரசுக்கு தான் உள்ளது என  இந்திய மருத்து கவுன்சில் நேற்று தெரிவித்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து  உத்தரவிட்டுள்ளது.மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்கில்  மூன்று மாதத்தில் புதிய சட்ட வரையறைகளை உருவாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம்  வழங்கிய மேற்கண்ட உத்தரவை இந்த ஆண்டே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு மற்றும் அதிமுக தரப்பில் உச்ச  நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு, இந்திய  மருத்துவ  கவுன்சில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா மற்றும் ரவீந்திர பட் ஆகியோர்  தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இந்த வழக்கில்  எதிர்மனுதாரர் அனைவரது தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டதா என கேள்வியெழுப்பினர். இதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பு வழக்கறிஞர் அளித்த பதிலில்,” இடஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு தான்  உட்சபட்ச அதிகாரம் உள்ளது. எங்களுக்கு கிடையாது. இருப்பினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதனை  நாங்கள் கடைபிடிக்க தயாரக இருக்கிறோம் என மழுப்பலான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதத்தில்,”இடஒதுக்கீட்டை இறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட குழு கடந்த  22ம் தேதி கூடியுள்ளது. அதுகுறித்த ஆலோசனைகளும் நடைபெற்று வருகிறது. மேலும் இடஒதுக்கீடு விவகாரத்தில் மாநில நடைமுறைகள்  கடைபிடிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் நடந்த வாதங்களின் போது பதிலளித்துள்ளார். இதனை நீதிமன்றம்  கருத்தில் கொள்ள வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து இந்த விவகாரத்தில் ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு  தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவில்,” ஓபிசி பிரிவினருக்கு மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு எதுவும் தற்போது  பிறப்பிக்க முடியாது. இதில் மத்திய அரசு முதலாவதாக அவர்களது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் பதில் மனுவாக தாக்கல் செய்யட்டும். பின்னர்  முடிவை மேற்கொள்ளலாம் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: