×

மாநில அரசின் நிதி நெருக்கடியை மனதில் கொண்டு தாது மணல் உற்பத்தி செய்ய டாமின் நிறுவனத்திற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்

வைகுண்டராஜன் மீதான வழக்குகளை கிடப்பில் போட்டது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: “ஏறக்குறைய 5 லட்சம் கோடியைத் தொட்டு விட்ட மாநில அரசின் நிதி நெருக்கடியை மனதில் கொண்டு, தாது மணல் உற்பத்தி செய்ய டாமின் நிறுவனத்திற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: “தாதுமணல் கொள்ளையைத் தடுக்க, பெருங்கனிமக் கொள்கை வகுக்கப்படும்” என்று 2013ல் அறிவித்த அதிமுக அரசு, சொன்னபடி செய்யாமல் தூங்கிக்  கொண்டிருக்கிறது. “அரசே தாதுமணல் எடுத்து விற்பனை செய்யும் பணியை மேற்கொள்ளும்” என்று 2016 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து விட்டு- அதையும் மறந்து, இன்றுவரை அதற்கான பணிகளை முடுக்கி விடாமல், யாருக்காகவோ” காத்திருப்பதும், காலம் தாழ்த்துவதும்  கடும் கண்டனத்திற்குரியது. “தாது மணல் மூலம் 20000கோடி வருவாயைப் பெருக்கி, கொரோனா பேரிடர் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியும்” என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு அறிக்கை அளித்திருப்பதாகவும் செய்தி வருகின்ற நிலையில்; “வைகுண்டராஜனுக்கு வழி விடுகிறதா டாமின் நிறுவனம்” என்று  இதழில் வெளிவந்துள்ள கட்டுரை கூர்ந்து கவனிக்கத்தக்கது.

ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட “கார்னட் மெகா ஊழல்” குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,  ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைத்தார். அந்தக் குழு ஆய்வு செய்து, அளித்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தொடர்ச்சியான இந்தக் கொள்ளைக்கு எல்லாம் காரணம் என்று, மாநிலத்தில் உள்ள அதிமுக அரசாலும், ஏன்; மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசாலும், குற்றம் சாட்டப்பட்ட வைகுண்டராஜன் மீதான வழக்குகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தாது மணல் முறைகேடுகள் குறித்த அனைத்து வழக்குகளையும் அதிமுக அரசு முனைப்புடன் நடத்தாமல்; ஆண்டுக்கு 20000கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும் தாதுமணல் விற்பனையை 7 வருடமாக துவக்காமல், மாநில அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

“இந்தியன் ரேர் எர்த் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, தாது மணல் உற்பத்தி செய்ய முயற்சித்து வருகிறோம்” என்றும்; “புரிந்துணர்வு ஒப்பந்தம் போட முயற்சி செய்கிறோம்” என்றும்; சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் கொள்கை விளக்கக் குறிப்புகளில் அதிமுக அரசு வெறும் ஒப்புக்காகக் கூறி வருகிறதே தவிர; இன்று வரை, தாது மணலை எடுத்து விற்க, எந்த ஆக்கபூர்வமான முயற்சியையும் முதல்வர் பழனிசாமி எடுக்கவில்லை. தொழில் துறை முதலீடுகளை ஈர்க்கப் போடப்படும் வழக்கமான “வெற்றுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்” போலவே, அதிமுக அரசு,  தாது மணல் விற்பனையிலும்கபட நாடகம் ஆடி வருகிறது. தாது மணல் கொள்ளையில் “மெகா ஊழல்” நடந்திருக்கிறது என்று கூறி, குழு ஒன்றைப் போட்டு விசாரித்த அதிமுக அரசு, இன்றுவரை வைகுண்டராஜனைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது ஏன்? எதை எதிர்பார்த்து? முதல்வர் பழனிசாமிக்கும், தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கும் உள்ள ரகசியக் கூட்டணியின் மர்ம உறவுகள்  என்ன? அதற்காக  நடந்துள்ள பேரம் என்ன?

ஆகவே தற்போது ஏறக்குறைய 5 லட்சம் கோடியைத் தொட்டு விட்ட மாநில அரசின் நிதி நெருக்கடியை மனதில் கொண்டு, தாது மணல் உற்பத்தி செய்ய டாமின் நிறுவனத்திற்கு உடனடியாக முதல்வர் பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்றும்; அந்தப் பணிகளை விரைவுபடுத்தி, அரசுக்கு வர வேண்டிய 20 ஆயிரம் கோடி வருமானத்தை, இந்த நிதி நெருக்கடி நேரத்திலாவது பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தாது மணல் கொள்ளை குறித்து அரசுக்கு  அளிக்கப்பட்ட அறிக்கைகள், அது தொடர்பான விசாரணைகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என்றும்; இந்தப் பிரச்னையில்,  நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்தி, ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை மதிப்பிலான தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் கொரோனா ஊரடங்குகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார - நிதி நெருக்கடி போன்றவற்றை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு அரசுக்கு அளித்துள்ள அறிக்கையை, தமிழக மக்களுக்கு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விலை உயர்வுக்கு கண்டனம்
மு.க.ஸ்டாலின்,தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பெரும்பான்மை ஏழை - எளிய மக்கள் சமையலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையை, நியாய விலைக் கடைகளில் வரும் அக்டோபர் 1 முதல், ஒரு லிட்டருக்கு 1.50 ரூபாய் உயர்த்தி, 15 ரூபாய் என்பதை, 16.50 ரூபாய்க்கு விற்கப் போகிறார்களாம். மண்ணெண்ணெயின் இந்த விலை உயர்வு கண்டனத்திற்குரியது. கொரோனா நோய்த் தொற்றின் விளைவாக, வாங்கும் சக்தியைப் பெருமளவுக்கு இழந்திருக்கும் எளிய மக்களின் முதுகில், அதிமுக அரசு, விலை உயர்வின் மூலம், மேலும் சுமையை ஏற்றுவது, சிறிதும் இரக்கமில்லாத - நியாயமில்லாத செயல். இந்த விலை உயர்வை அரசே ஏற்றுக்கொண்டு, பழைய விலையிலேயே நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணெயை வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : crisis ,state government ,Domin ,company , With the financial crisis of the state government in mind, Domin should immediately order the company to produce ore sand
× RELATED நீட் தேர்வை மாநில அரசுகளின்...