தேர்தல் பணிகள் குறித்து தீவிர ஆலோசனை: காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை மாற்ற முடிவு: தினேஷ் குண்டு ராவ் முன்னிலையில் கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை: தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தினேஷ் குண்டு ராவ் முன்னிலையில், கே.எஸ்.அழகிரி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டு ராவ் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டு முக்கிய நிர்வாகிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார்.  இந்நிலையில், கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த நேற்று சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார். இதில், மூத்த தலைவர்கள் அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டு  தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.  

இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்பிக்கள் ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத் மற்றும் மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், வீரபாண்டியன், ரூபி மனோகரன், ஏ.ஜி.சிதம்பரம், ஜேம்ஸ் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்கள் மாவட்டங்களில் உள்ள உள்கட்சி விவகாரம், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தனர்.

 அப்போது, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டதால் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவர்களை மாற்றக்கூடாது என்று கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது.   இதற்கு பதிலளித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில தலைவர்கள் மாறும் போது செயல்படாதவர்களை மாற்றுவது வழக்கமான ஒன்று தான். திருநாவுக்கரசர் தலைவராக பொறுப்பேற்ற பின்பும் மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டனர். நான் பொறுப்பேற்ற பின்பு இதுவரை யாரும் மாற்றப்படவில்லை. ஆனால் மாற்ற வேண்டிய சூழ்நிலை வந்தால் மாவட்ட தலைவர்களை மாற்றிதான் ஆக வேண்டும் என்று பேசியதாக காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 கே.எஸ்.அழகிரியின் இந்த பேச்சாமல் தமிழகத்தில் விரைவில் மாவட்ட தலைவர்கள் மாற்றம் இருக்கும் என்று காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுகிறது. இந்த கூட்டத்தை தொடர்ந்து, மாநில செயற்குழு உறுப்பினர்களிடம் தினேஷ் குண்டு ராவ் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கட்சி பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து தினேஷ் குண்டு ராவ் அடிக்கடி வந்து செல்ல உள்ளதாக காங்கிரசார் தெரிவித்தனர்.

புதுவை முதல்வர் வருகை

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டு ராவ், புதுவை மாநிலத்துக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாள் சுற்று பயணமாக தமிழக நிர்வாகிகளை அவர் சத்தியமூர்த்திபவனில் சந்தித்தார். இந்நிலையில் புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று சத்தியமூர்த்திபவனுக்கு வந்து தினேஷ் குண்டு ராவை சந்தித்து பேசினார். மேலும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டு அறிவுரை வழங்கினார்.

Related Stories: