×

விசாரணைக்கு அழைத்து சென்று சித்ரவதை: பெண் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 4 பேருக்கு அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை,  விசாரணைக்கு அழைத்து சென்று சித்ரவதை செய்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கே.கே.நகரை சேர்ந்த அபுல்ஹசன் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2013ம் ஆண்டு குடும்ப பிரச்னை காரணமாக எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை அசோக்நகர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி, ஏட்டு மீராபாய் மற்றும் வரலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர். அதன்பிறகு எதிர்தரப்பிடம் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு என் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணை என்ற பெயரில் 8 நாட்கள் என்னை காவல்நிலையத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தி சித்ரவதை செய்தனர். எனவே இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் அளித்திருந்தார். மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும் போது மனித உரிமை மீறல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே தமிழக அரசு மனுதாரருக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் இழப்பீடாக 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும். இன்ஸ்பெக்டர் லட்சுமியிடம் இருந்து ரூ.1 லட்சமும், மற்ற 3 பேரிடம் இருந்து தலா ரூ.25 ஆயிரமும் வசூலித்துக் கொள்ளலாம். மேலும் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்பட 4 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.


Tags : persons ,inspector ,Human Rights Commission , Investigation, Torture, Female Inspector, SI, Penalties, Human Rights Commission
× RELATED உ.பி. ஹத்ராஸ் வன்கொடுமை தொடர்பாக...