கந்தர்வ குரலால் 50 ஆண்டுகாலம் மக்களின் இதயங்களை கட்டிப்போட்டவர் : ஜனாதிபதி, பிரதமர், பிற மாநில முதல்வர்கள் இரங்கல்... திரையுலகினர், ரசிகர்கள் கண்ணீர்!!

சென்னை : மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் இரங்கல் தெரிவித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். குடியரசுத் தலைவரின் பதிவில், “பாடும் நிலா என கூறப்படும் எஸ்.பி.பியின் மெல்லியக் குரலை இழந்து விட்டோம், பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் பெற்ற எஸ்.பி.பியின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அதே போல, குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, “இசை உலகில் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை அவர் விட்டுச் சென்றிருக்கிறார் எஸ்.பிபி. அவரின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். எஸ்.பிபியின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி எஸ்.பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “திரு.எஸ்பிபி அவர்களின் மறைவால் நமது கலாச்சார உலத்துக்கு பேரிழப்பு. நாடு முழுவதும் எல்லா வீட்டிலும் ஒலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் இசை பல சகாப்தங்களாக பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி.” என குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல பாடகரான எஸ்.பி.பி, ஐந்து சகாப்தங்களுக்கு மேலாக தனது இசையின் மூலம் மக்களுக்கு உத்வேகம் அளித்து வந்தார். பாடகர், இசையமைப்பாளர் என பல்வேறு திறமைகளால் மக்களின் மனதை கவர்ந்த எஸ்.பி.பியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் தனது ட்விட்டர் பக்க பதிவில், “பிரபல பாடகர் எஸ்பபியை விண்ணுலகில் பாட வாருங்கள் என்று விண்ணுலகம் அழைத்துக்கொண்டதோ? என்றே நினைக்க தோன்றுகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,திரையுலகினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல். இனிமேல் அவரது குரல் விண்ணுலகில் ஒலிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>