×

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கு! - விசாரணையை அக்., 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!!

டெல்லி:  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கை அக்டோபர் 12ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வந்தது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து 21 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு மூலம் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது.

 இதையடுத்து அப்பல்லோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பின்னர் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு ஆறுமுகசாமியின் அனைத்து விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய காணொளி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு மற்றும் ஆறுமுகசாமியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இன்னும் ஒரு சாட்சியை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.

எனவே ஆணையத்தின் விசாரணையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். அதேவேளையில் சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய தங்களுக்கு அனுமதி அளிக்குமாறு கோரினர். பின்னர், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அப்போது தமிழக அரசின் இடைக்கால மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Arumugasami Commission - Supreme Court , Arumugasami, Commission, Inquiry, Oct. 12, Supreme Court
× RELATED நான் நம்பும் வேட்பாளருக்கு...