×

பொறியியல் தரவரிசைப் பட்டியல் தேதி மீண்டும் மாற்றம் :வருகிற 28-ம் தேதி பட்டியல் வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தகவல்!!!

சென்னை:  பி.இ., பி.டெட்., பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வருகிற 28ம் தேதி வெளியாகும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்விற்காக ஆன்லைன் விண்ணப்பப் பதிவில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில்  ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர், தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 28ம் தேதி பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்திருக்கிறார். அதாவது மாணவர்கள் சிலர் சான்றிதழை இன்னும் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதால் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிப்பதற்காக தரவரிசைப் பட்டியல் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Engineering, Ranking, List, Higher Education, Minister, K.P. Anbazhagan
× RELATED தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக...