கொரோனாவை காரணம்காட்டி பீகார் தேர்தலை தள்ளிவைக்க கூறுவதை ஏற்க முடியாது : உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:கொரோனா வைரஸ் பரவலை காரணமாக கருதி பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.பீகார் மாநில தேர்தல் 3 கட்டங்களாக நடத்த திட்டமிட்டு தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை உட்பட அதன் அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நேற்று தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அஜய் குமார் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது என்பது மக்களின் உயிருக்கும், உடல்நலத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். அதனால் பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலைத் தள்ளிவைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் இதில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி அசாதாரண சூழல் நிலவும்போது தேர்தலைத் தள்ளிவைக்க இடம் உண்டு எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து உத்தரவில்,கொரோனாவை காரணம்காட்டி பீகார் தேர்தலை தள்ளிவைக்க கூறுவதை ஏற்க முடியாது. அதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட முடியாது. கொரோனோ விவகாரத்தில் மாநில மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ளும். அதனால் இதுகுறித்து மனுதாரர் கவலை அடையத் தேவையில்லை. இதுகுறித்து ஆணையமும் உறுதியளித்துள்ளது என தெரிவித்த நீதிபதிகள், பீகார் மாநில தேர்தலை ஒத்திவைக்க கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories:

>