பீகார் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7ம் தேதிகளில் 3 கட்டமாக நடைபெறுகிறது : நவம்பர் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை!!

புதுடெல்லி:கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பீகாரில் 3 கட்டங்களாக அக். 28, நவ. 3, நவ. 7ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவ. 10ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 65 தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 27 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தனர். இதனால் காலியான 27 தொகுதிகள் உட்பட பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 64 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதி ஆகியன காலியாக உள்ளன. மேலும், பீகார் சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் நவ. 29ம் தேதியுடன் முடிவடைகின்றது. அதனால், 65 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் பீகார் சட்டப்பேரவை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.

அதில், ‘பல்வேறு மாநிலங்களில் 64 சட்டமன்ற தொகுதி மற்றும் ஒரு மக்களவை தொகுதி காலியாக உள்ளது. 65 தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறும்’ என்று அறிவித்தது. மேலும், கொரோனா நெருக்கடிக்கு பின்னர் நடத்தப்படும் முதல் தேர்தல் என்பதால், தேர்தல் ஆணையம் கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான பீகார் தேர்தல் அட்டவணையை அறிவிக்க வந்துள்ளோம். ஒப்பீட்டு அளவில் புள்ளிவிவரங்களை பார்த்தால், இது கொரோனா தொற்று காலங்களில் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய தேர்தல். பீகாரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7.29 கோடி. 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். பீகார் தேர்தலுக்கு 1,89,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். தேர்தல் பணியில் ஈடுபட்டோருக்கு 7 லட்சம் சானிடைசர், 46 லட்சம் முகக் கவசங்கள், 6 லட்சம் பிபிஇ கருவிகள், 7.6 லட்சம் முகத்தை மறைக்கும் கவசங்கள், 23 லட்சம் கையுறைகள் வழங்கப்படும்.

85 வயதுக்கு மேற்பட்டோர், கொேரானா நோயாளிகளுக்கு தபால் வாக்கு வசதி ஏற்படுத்தி தரப்படும்.

கொரோனா தொற்று வாக்காளர்கள் வாக்குப்பதிவு நாளின் கடைசி மணி நேரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். வீடுவீடாக பிரசாரம் செய்ய 5 பேர் வரை செல்லலாம். பீகார் சட்டசபை காலம் நவ. 29ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. சட்டமன்றத்தில் 243 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 38 இடங்கள் எஸ்சி மற்றும் இரண்டு எஸ்டி-க்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ேவட்பாளர் நியமனம் மற்றும் பிரமாணப் பத்திரத்தை ஆன்லைனில் சமர்பிக்கலாம்.

வைப்புத்தொகையை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். வேட்பு மனுவை சமர்ப்பிக்க வேட்பாளருடன் 2 நபர் மற்றும் 2 வாகனங்கள் அனுமதிக்கப்படும். 16 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் இந்த அறிவிப்பு முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. பீகார் பேரவை தேர்தல் 3 கட்டங்களாக அக். 28, நவ. 3, நவ. 7ம் தேதிகளில் வாக்குபதிவும், நவ. 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். செப். 29ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி மற்ற மாநிலங்களில் நடத்த வேண்டிய இடைத் தேர்தல் குறித்து அறிவிப்பை வெளியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: