×

மணல் பிரச்னையால் பாதியிலேயே நிற்கும் கட்டுமான பணிகள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த ஓராண்டிற்கும் மேலாக நிலவி வரும் மணல் பிரச்னையால் ஆயிரக்கணக்கான கட்டுமானப் பணிகள் முடிவடையாமல் பாதிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அருகே தூதை, கண்டரமாணிக்கம் அருகே கள்ளிப்பட்டு, தேவகோட்டை, கல்லல் ஆகிய இடங்களிலும், ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடி, கச்சாத்தநல்லூர், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உள்ளிட்ட இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. சில ஆண்டுகளுக்கு முன் இந்த குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதையடுத்து தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இருந்து மணல் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யும் அரசு மணல் குவாரி சிவகங்கை அருகே கீழப்பூங்குடியில் பொதுப்பணித்துறை சார்பில் இயங்கி வந்தது. இந்த மையமும் மூடப்பட்டது. மணல் விற்பனை மையம் மூலம் இல்லாமல் நேரடியாக திருச்சியில் இருந்து மட்டும் சில நாட்களுக்கு ஒரு முறை சிவகங்கை மாவட்டத்திற்கு மணல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிகப்படியான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த மணல் ஒரு லோடு ரூ.50ஆயிரம் வரை கடுமையான விலை உயர்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக கட்டுமான பணிகளுக்கு மணல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நிர்ணயிக்கப்படாத அளவில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் நடுத்தர மற்றும் அரசு திட்டத்தில் பயன் பெறும் ஏழ்மை நிலையில் மக்கள் வீடு உள்ளிட்ட கட்டுமான பணிகளை முடிக்க முடியாமலும், புதிய கட்டுமானப்பணிகள் எதுவும் தொடங்க முடியாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மணல் பிரச்னையால் நிறுத்தப்பட்ட கட்டிடங்கள் பல மாதங்களாக பணிகள் நடக்காமல் இருப்பதால் சிமெண்ட், கம்பிகள் உள்ளிட்ட மற்ற கட்டுமான பொருட்களிலும் உயர்வு ஏற்பட்டு திட்டமிட்ட செலவுக்குள் கட்டிடங்களை கட்ட முடியாமல் போகிறது. இதனால் கட்டிட உரிமையாளர்கள் கடும் மன உளைச்சலுக்கும், பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளனர்.

மீண்டும் விற்பனை நிலையம் வேண்டும்

கட்டுமான பணியில் ஈடுபடுபவர்கள் கூறியதாவது:சிவகங்கை மாவட்டத்தில் அரசு சார்பில் மணல் குவாரிகள் இல்லை. வெளி மாவட்டத்தில் இருந்து மணல் கொண்டு வந்து இங்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையிலேயே அடிக்கடி மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது மணல் வாங்க முடியாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. மேலும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து கட்டுமானப்பணிகள் பாதிப்படைந்து வருனிறது. சிவகங்கை மாவட்டத்தில் மீண்டும் மணல் விற்பனை நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் பிரச்னை குறித்து ஆய்வு செய்து அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.


Tags : Sivagangai: Thousands of construction projects in Sivagangai district due to sand problem which has been going on for more than a year.
× RELATED நீடாமங்கலம் - மன்னார்குடி இடையே ரயில்...