×

கீழடி அகழாய்வில் ஆமை வடிவ அச்சு, பானை ஓடு வட்டச்சில்லு கண்டெடுப்பு

திருப்புவனம் : கீழடி அகழாய்வு பணியில் ஆமை வடிவ அச்சு, பெண் முகம் கொண்ட பானை ஓடு, பெண்கள் விளையாடும் வட்ட சில்லு உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட மற்றும் அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அகரத்தில் கண்டறியப்பட்ட உறைகிணறு இதுவரை 21 அடுக்குகள் வரை உள்ளது. இதுமேலும் கூடுதலாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

கீழடியில் ஆமை வடிவ அச்சு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய சுங்கச்சாவடி போன்று ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது, வெளியூர் நபர்களை கண்டறிய அச்சுக்களை பயன்படுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. உள்ளங்கைக்குள் அடங்கும் வகையில் சிறிய கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த அச்சின் மேற்புறம் மூன்று சிறிய கோடுகள் உள்ளன. இந்த உருவம் ஆமையை குறிப்பதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பெண் முகம் கொண்ட பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது. பெண் முகம் கொண்ட அச்சில் பெண்கள் காதணிகள் கொண்டவர்களாக இருந்துள்ளதும், தெரிய வந்துள்ளது. பெண்கள் விளையாடும் (பாண்டி விளையாட்டு) வட்டச்சில் கீழடி அகழாய்வில் கிடைத்து வருகின்றன. இதுதவிர பானை வளையங்கள், கழுத்துப்பகுதியும் கிடைத்துள்ளன. பானைகள் அனைத்தும் கனமான அளவிலும் எடை அதிகமான அளவிலும் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாதத்துடன் பணி முடிவடைய உள்ள நிலையில் கீழடியிலும், அகரத்திலும் மட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொந்தகையில் ஏற்கனவே கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகளில் உள்ள பொருட்களை வெளியே எடுக்கும் பணி நடைபெறுகிறது.

மணல் கொள்ளையால் அகழாய்வு பாதிப்பா?

மதுரை: சிவகங்கை மாவட்டம், மணலூரை சேர்ந்த மகேஷ் ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்ட எல்லையில், சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதிக்கரையில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தப்பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சங்கக்காலம் முதல், நதிக்கரை நாகரீகம் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன.

தமிழ் பிராமி எழுத்துக்கள், பண்டைய நாகரீகப் பொருட்கள் தொன்மையான தமிழர் மனித வாழ்வியலை பிரதிபலிக்கிறது. அகழாய்வு பகுதியில் இருந்து 300 மீ தொலைவில் தான் குடிமராமத்து உள்ளிட்ட பணிகள் நடக்க வேண்டும். ஆனால், விவசாய நிலங்களில் சவடு மண் அள்ளுவதாக கூறி அதிக ஆழத்திற்கு மணல் அள்ளுகின்றனர். குடிமராமத்து பணிகள் என்ற பெயரிலும் மணல் கொள்ளை நடக்கிறது. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி, தொல்லியல் அகழாய்வு பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் மணல் அள்ளக் கூடாது என்றும், யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர், சிவகங்கை கலெக்டர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து புகைப்படத்துடன் கூடிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை அக்.13க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Turnaround: Tortoise-shaped mold, female-faced pottery, round chip played by women
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...