×

‘‘யார்ட்ட பேசிட்டிருக்க தெரியுமா...சவுண்டு கொடுத்து பேசிட்டிருக்கே...’’

* பெண் கவுன்சிலரிடம் விருதுநகர் கலெக்டர் ‘கர்புர்’
* மிரட்டல் ஆடியோ வலைத்தளங்களில் வைரல்

விருதுநகர் :  குடிநீர் பிரச்னை குறித்து செல்போனில் பேசிய ஊராட்சி பெண் கவுன்சிலரிடம், ‘‘யார் கிட்ட பேசிக்கிட்டு இருக்க தெரியுமா’’ என விருதுநகர் கலெக்டர் ஒருமையில் பேசுவது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர், ஆர்.ஆர்.நகர் அருகே வச்சக்காரப்பட்டி ஊராட்சி உள்ளது. தலைவராக ஜெயபாண்டியம்மாள், துணைத்தலைவராக அனந்தராமன் உள்ளனர். இங்கு துணைத்தலைவரின் ஒத்துழைப்பு இல்லாததால் பணிகள் முடங்கி கிடப்பதாக கூறப்படுகிறது. பழுதான குடிநீர் மோட்டாரை சரி  செய்ய நிதியில்லாததால், ஊராட்சியில் உள்ள சண்முசுந்தரபுரம் கிராம மக்கள் தண்ணீரின்றி கடந்த இரு மாதமாக அவதிப்படுகின்றனர். குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலக முற்றுகை, அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலத்தில் மனு அளித்தல் என கிராம மக்கள் பல நடவடிக்கை எடுத்தும் பயனில்லை.

இதுகுறித்து ஊராட்சி 9வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டர் கண்ணனிடம் புகார் தெரிவித்த நிலையில், இதற்கு அவர் அலட்சியமாகவும், ஒருமையில் பதில் அளிக்கும் ஆடியோ வைரலாகி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  செல்போன் உரையாடல் வருமாறு:
கவுன்சிலர் ராஜேஸ்வரி: சண்முகசுந்தரபுரத்தில் 2 மாதமாக குடிநீர் வரவில்லை. இது குறித்து உங்களுக்கும், பிடிஓவுக்கும் கடிதம் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. தண்ணீரின்றி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

கலெக்டர்: நீங்கதான வார்டு உறுப்பினர். என்ன பிரச்சனை?
ராஜேஸ்வரி: சார் 2 மாசமா தண்ணீ வரல சார்... குழந்தைங்க, பெரியவங்க ரொம்ப சிரமப்படுறாங்க.கலெக்டர்: நீங்க தானம்மா வார்டு மெம்பர்? என்ன பிரச்னை, தண்ணி இல்லையென்கிறத, எல்லாரும் சொல்வாங்கள... ஏன் தண்ணி வரல.
ராஜேஸ்வரி : மோட்டார் ரிப்பேர்... சரி பண்ணல.

கலெக்டர்: சரி பண்ணலன்னா அதை சரிபண்ணுங்க... உங்க பிரசிடெண்ட் என்ன பண்றார்?
ராஜேஸ்வரி: புது மோட்டார் வாங்கி போட்டேன். அதுவும் ரிப்பேர். எவ்வளவு தான் கையில் இருந்து காசு போடுவேன்... துணைத்தலைவர் கையெழுத்து போட மாட்டேங்கிறார்ன்னு தலைவர் சொல்றாங்க. இவங்க பிரச்னைக்கு மக்கள்தான் பலியா சார்.

கலெக்டர்: யார் கிட்ட பேசிக்கிட்டு இருக்க தெரியுமா...
ராஜேஸ்வரி: என்ன சார்?
கலெக்டர்: (மீண்டும்) யார் கிட்ட பேசிக்கிட்டு இருக்க தெரியுமா...?
ராஜேஸ்வரி: சார் நீங்க ஆட்சியர் தானங்க சார்..
கலெக்டர்: சவுண்ட் கொடுத்து பேசிகிட்டு இருக்குற...

ராஜேஸ்வரி: இல்லை சார்... நாங்க ரெம்ப கஷ்டப்படுறோம் சார், அதை வச்சிதான் சொல்லிகிட்டு இருக்குறேன்.
கலெக்டர்: உங்க தலைவர், துணைத்தலைவர பதவிய விட்டு தூக்குங்க. வேலை செய்யலனா தீர்மானம் போடுங்க, அத விட்டுட்டு எங்கிட்ட வந்து கேட்டா நான் என்ன பண்ணுறது?.

ராஜேஸ்வரி: நாங்களும் பொறுமையா இருந்தோம் சார்... நீங்க கேட்பீங்கன்னு...
கலெக்டர்: மெம்பர் எல்லாம் சேர்ந்து லெட்டர் கொடுங்க... பதவிய விட்டு தூக்க பாப்போம் சரியா.
இவ்வாறு அவர்களின் பேச்சு முடிகிறது.

மக்கள் பிரதிநிதியான கவுன்சிலர், குடிநீர் பிரச்சனையை தெரிவித்தற்கு கலெக்டர் ‘யார் கிட்ட பேசிகிட்டு இருக்க தெரியுமா’ என ஒருமையில் பேசியது பொதுமக்கள், பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Yard , Virudhunagar: The Virudhunagar Collector said to the Panchayat woman councilor who spoke on her cell phone about the drinking water problem, 'Do you know who is talking?'
× RELATED திருச்சி ரயில்வே கோட்டத்தில் 2...