முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை இழைத்திருப்பதாக திமுக உறுப்பினர் கனிமொழி விமர்சனம்!!

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை இழைத்திருப்பதாக, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தில் 2 அவைகளிலும் 3 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சரவையிலிருந்து சிரோமணி அகாலி தள கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.இந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ரயில் மறியலிலும் ஈடுபட்டுளள்னர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றன. அதிமுக இந்த மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் இந்த மசோதாக்களை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, வேளாண் மசோதாக்களை அனைவரும் எதிர்த்து வருகின்றனர். மத்திய அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்திருக்கிறார். திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் கூட, தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இம்மசோதாக்களை ஆதரித்திருப்பது விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து கனிமொழி இன்று வெளியிட்டுள்ளார் ட்விட்டர் பதிவில், அனைத்து விவசாயிகளையும் கார்ப்பரேட்டுகளின் அடிமையாக்கும் சட்டமே புதிய வேளாண் சட்டம். பொது விநியோக முறையையே அடியோடு சீர்குலைக்கும் இச்சட்டத்தை எதிர்த்து போராட வேண்டியது நம் அனைவரது கடமை, எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>