×

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது: விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்கி வருகிறது. கடந்த வாரத்தில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அந்த அணைகள் ஏற்கனவே நிரம்பிய நிலையில் இருந்ததால் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.

வினாடிக்கு அதிகபட்சமாக 75,000 கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது. கடந்த 21ஆம் தேதி முதல் கர்நாடக அணைகளின் உபரிநீர் மேட்டூர் அணைக்கு வர தொடங்கியது. உபரிநீர் வரத்து காரணமாக கடந்த 21ஆம் தேதி காலை 81.77 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் தற்பொழுது 99.6 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்திருக்கிறது.

இந்நிலையில் காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து இன்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 35,000 கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 20,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 850 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நீர்வரத்து 35,000 கனஅடியாக இருப்பதால் இன்று பிற்பகலில் மேட்டூர் அணை நீர்மட்டம் 66வது முறையாக 100 அடியை எட்டும் வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Mettur Dam , Mettur Dam, Farmers
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!