சாத்தான்குளம் அருகே வாலிபர் கொலை விவகாரம்: இன்ஸ்பெக்டர் உட்பட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப்பதிவு: அதிமுக பிரமுகர் சிறையில் அடைப்பு

நெல்லை: தட்டார்மடம் வாலிபர் காரில் கடத்தி கொலையான வழக்கில் இன்ஸ்பெக்டர், அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் சரணடைந்த அதிமுக நிர்வாகி உள்ளிட்ட இருவர் நேற்றிரவு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (35). நிலத்தகராறில் முன்விரோதம் தொடர்பாக கடந்த 17ம் தேதி ஒரு கும்பலால் காரில் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக பிரிவு அதிமுக செயலாளர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் திருமணவேல், அவரது தம்பி முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி ேபாலீசார் நேற்று முன்தினம் தொடங்கி இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல், அவரது தம்பி முத்துகிருஷ்ணன், முத்துராமலிங்கம், சின்னத்துரை உள்ளிட்ட 6 பேர் மீது 364 (கடத்தி செல்வது), 302 (கொலை வழக்கு) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்துள்ளனர். இதனிடையே சென்னையில் சரணடைந்த திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் சென்னை சிறையிலிருந்து கொண்டு வரப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: