×

மாவட்ட நிர்வாகம் என்ன செய்கிறது? பல கோடி அபராதம் விதிக்குமளவுக்கு பல்லாயிரம் டன் மணல் கொள்ளையா?

* அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?
* ஐகோர்ட் மதுரை கிளை சரமாரி கேள்வி

மதுரை: பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவுக்கு பல்லாயிரம் டன் மணல் கொள்ளை நடந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் என்ன செய்கிறது, அரசு அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கலெக்டரிடம் ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. நெல்லை மாவட்டம், தெற்கு கல்லிடைக்குறிச்சி மூலச்சி பகுதியைச் சேர்ந்த சிவசங்கர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் சட்டவிரோத மணல் குவாரியை தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்தனர். அப்ேபாது நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர், எஸ்பி மணிவண்ணன் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜராகினர்.

அப்போது கலெக்டர் கூறும்போது, ‘‘எம்.சாண்ட் குவாரிக்கு அனுமதி பெற்று, சட்டவிரோதமாக மணல் குவாரி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விஏஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவுக்கு மணல் கொள்ளை நடந்துள்ளது. அதுவரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்தது? இதன் மூலம் பல்லாயிரம் டன் மணல் கொள்ளை போயுள்ளது தெரிகிறது. இவ்வளவு பெரிய அளவுக்கு நடந்தும் விஏஓ மீது மட்டும் நடவடிக்கை எடுக்க என்ன காரணம்? கனிமவளத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

இதுவரை எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது? லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் எத்தனை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது? யார் மீதாவது குண்டர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? இல்லையென்றால் அதற்கு என்ன காரணம். மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு 2 ஆண்டாகியும் மாவட்ட நிர்வாகம் என்ன செய்கிறது? அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பேப்பரில் தான் உள்ளன. உடந்தையாக இருக்கும் கனிமவளத்துறை மற்றும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இந்த நிலை பல மாவட்டங்களில் உள்ளது என்று சரமாரியாக குற்றம் சாட்டினர்.

 இதற்கு கலெக்டர், ‘‘உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.  இதையடுத்து நீதிபதிகள், அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்.11க்கு தள்ளி வைத்தனர்.


Tags : district administration ,Tens of thousands , What does the district administration do? Tens of thousands of tons of sand looted to the point of being fined billions?
× RELATED உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம்!!