பேஸ்புக், டிக்டாக்கை ெதாடர்ந்து ‘பப்ஜி’ விளையாட்டில் மலர்ந்த காதல்: திருவட்டார் காவல் நிலையத்தில் ஜோடி தஞ்சம்: கோயிலில் மாலை மாற்றி திருமணம்

குலசேகரம்: முகநூல் காதல், டிக்டாக் காதல் என்று காலத்திற்கு ஏற்றாற்போல் காதலும் மாற தொடங்கி விட்டது. இதில் தற்போது ‘பப்ஜி’ காதலும் இணைந்துள்ளது. குமரி மாவட்டம் திருவட்டார் அருகே செறுகோல் பகுதியை சேர்ந்த மரவியாபாரி சசிகுமார். இவருக்கு 2 மகள்கள். இளைய மகள் பபிஷா(20) திருவிதாங்கோடு பகுதியிலுள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டார். வீட்டில் இருந்த இவர் மொபைல் போனில் மணிக்கணக்கில் பப்ஜி விளையாடுவார். பெற்றோரும் இதை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டனர். ஆனால் இந்த விளையாட்டு விபரீதமாக மாறிவிட்டது.

இவருடன், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த டேனியல் என்பவரது மகன் அஜின் பிரின்ஸ் (24) என்பவரும் இணைந்து பப்ஜி விளையாடி இருக்கிறார். விளையாட்டில் ஆரம்பித்த நட்பு  நாளடைவில் இருவரும் போனில் பேசி பழகும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தது. இதையடுத்து ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினர். இந்த நிலையில் கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய பபிஷா, காரில் காத்திருந்த பப்ஜி காதலன் அஜின் பிரின்சுடன் தலைமறைவானார். இதில் அதிர்ச்சியடைந்த பபிஷாவின் தந்தை சசிகுமார் ‘மகளை காணவில்லை என்று திருவட்டார் காவல்நிலையத்தில் புகார்’ செய்தார். போலீசார் வழக்குபதிந்து காதல் ஜோடியை தேடிவந்தனர்.

இதை அறிந்த காதலர்கள் கடந்த 22ம் தேதி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து போலீசார் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்நிலையம் வந்த அஜின் பிரின்ஸின் பெற்றோர் இவர்கள் காதலை ஏற்கவில்லை. ஆனால் இருவரும் மேஜர் என்பதால் போலீசார் அவர்களை சேர்த்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து இரு குடும்பத்தினர் முன்னிலையில் அருகிலுள்ள கோயிலில் காதல் ஜோடிகள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

Related Stories: