சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.  சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.  தற்போது சென்னையில் தினசரி ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது வரை 1 லட்சத்து 58 ஆயிரத்து 594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 629 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 9868 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 3097 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் சென்னையில் நோய் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

சென்னையில் ஒரு தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த தெரு முழுவதையும் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வந்தது. இந்நிலையில், சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவே ஒரு தெருவில் 5 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த பகுதி கட்டுப்பாடு பகுதியாக தற்போது அறிவிக்கப்படுகிறது. சென்னையில் நாளுக்கு நாள் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதன்படி சென்னையில் தற்போது கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: