தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா சிகிச்சை செலவு 1,982 கோடி : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: கொரோனா சிகிச்சை மற்றும் கட்டுமான பணிகளுக்கு ரூ. 1,982 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். நேற்று மட்டும் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 90,607 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 5,692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1089 பேர், செங்கல்பட்டில் 299 பேர், திருவள்ளூரில் 265 பேர், காஞ்சிபுரத்தில் 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரத்து 15 ஆண்கள், 2 லட்சத்து 23 ஆயிரத்து 646 பேர் பெண்கள், 30 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 5,470 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 8 ஆயிரத்து 210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 46 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 66 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் 15 பேர், திருப்பூரில் 9 பேர், கோவையில் 6 பேர், சேலத்தில் 5 பேர், வேலூரில் 4 பேர் என்று மாநிலம் முழுவதும் மொத்தம் 66 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 9,076 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி : கொரோனா தொற்றை கண்டறிய தினமும் 80 ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதில் 6.4 சதவீதம் மட்டுமே தொற்று கண்டறியப்படுகிறது. மாநிலம் முழுதும் தொற்று பாதிப்பு, 10 சதவீதத்துக்கு கீழ்தான் உள்ளது. இறப்பு சதவீதம் 1.06 சதவீதத்தில் இருந்து, 1.02 சதவீதமாக குறைந்துள்ளது. இதனை ஒரு சதவீதத்துக்கு கீழ் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 90.02 சதவீதம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா சிகிச்சை மற்றும் கட்டுமான பணிகளுக்கு, 1,982 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தேவைப்படும் நிதியை முதல்வர் ஒதுக்கி வருகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை, இசஞ்சீவனி திட்டத்திற்காக, தமிழக அரசையும், பொதுமக்களையும் பிரதமர் மோடி பாராட்டினார். மாநிலத்தில், 40 ஆயிரம் படுக்கைகளில், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராம அளவிலான மருத்துவமனைகளிலும், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: