×

தமிழக அரசு வழிகாட்டி நெறிமுறை வெளியீடு கோயம்பேடு மார்க்கெட் 28ம் தேதி திறப்பு: சில்லறை விற்பனைக்கு தடை

சென்னை: கொரோனா பரவலை தொடர்ந்து மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் வரும் 28 ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  
சென்னையில் கொரோனா அதிகமாக பரவுவதற்கு காரணமாக அமைந்த சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை மூடுமாறு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தையடுத்து மார்க்கெட் மூடப்பட்டது. இதைதொடர்ந்து திருமழிசையில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாபாரிகள் விடுத்த கோரிக்கையின் பேரில் 28ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் வரும் 28ம் தேதி திறப்பது குறித்து சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் வியாபார சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது.

இக்கூட்டத்தில் கொரோனா தொற்று பரவுதலை தடுக்க அங்காடி திறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பே கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் கொரோனா தொற்று பரிசோதனை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர் செயலர் தெரிவித்தார். இதற்கு வணிகர்கள் ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட் திறப்பது குறித்து வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

* அங்காடிக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் உடல் வெப்ப சோதனை மற்றும் தேவைப்படும். இதர பரிசோதனைகள் செய்த பின்னரே அங்காடிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
* ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு முற்றிலும் தடை.
* தனிநபர் கொள்முதல் மற்றும் சில்லறை வணிகம் முற்றிலுமாக தடைசெய்யப்படுகின்றன.
* அங்காடியில் உள்ள கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பின்னல் ஆடைகள் வழங்கப்படும். அதனை உடுத்திய பணியாளர்களே கடைகளில் அனுமதிக்கப்படுவர்.
* அங்காடிக்குள் கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் அங்காடிக்கு வரும் அனைத்து நபர்களும் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி கடைபிடித்தல் கட்டாயமாக்கப்படும்.
* கடையின் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் அனைத்து உரிமையாளர்களும் பராமரிக்க வேண்டும்.
* ஒவ்வொரு கடைகளிலும் கடையின் நுழைவுவாயில் முன்பு பெடல் சானிடைசர் வைக்க வேண்டும். அனைவரும் சானிடைசர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொண்ட பிறகே பொருட்களை கொடுக்க வேண்டும்.
* வெளியே மற்றும் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து வியபாரம் செய்வது முற்றிலும் தடை செய்யப்படும்.
* மொத்த காய்கறி அங்காடிக்கு வரும் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் 5 மணி வரை அனுமதிக்கப்படும். வாடிக்கையாளர்களின் வாகனங்கள் அதிகாலை முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படும். காய்கறி அங்காடியிலுள்ள நுழைவுவாயில்கள் காலை 9 மணி அளவில் மூடப்படும்.
*  வாகன நெரிசலை தவிர்க்கும்பொருட்டு அங்காடிப்பகுதியில் ஒருவழிப்பதை அறிமுக்கப்படுத்தப்பட்டு வாகன போக்குவரத்து சீர் செய்யப்படும்.
* கோயம்பேடு வணிக வளாகத்தில் பொதுமக்களிடன் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அனைத்தும் கேமராக்கள் மூலம் அங்காடி நிர்வாக குழுவால் கண்காணிக்கப்படும்.
* பிரதி வாரம் வெள்ளிக்கிழமை அங்காடிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நடைமுறைகளை கடைபிடிக்காதது கண்டறியப்பட்டால் காவல் துறையினர் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Government ,Tamil Nadu Guidelines Publication Coimbatore Market Opening , Government of Tamil Nadu Guideline Publication Coimbatore Market Opening on 28th: Ban on retail sale
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...