தமிழக சார்பு நீதிமன்றங்களில் நேரடி விசாரணையில் தளர்வு: உயர் நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: சார்பு நீதிமன்றங்களில் நேரடி விசாரணையில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக குழு அறிவித்துள்ளது. கொரோனாவால் மார்ச் 25 முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. பின்னர் உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் குறைந்த எண்ணிக்கையில் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை தொடங்கியது. மாவட்ட நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. தினமும் 10 வழக்குகளை பட்டியலிட்டு நேரடி விசாரணையை மாவட்ட நீதிமன்றங்கள் நடத்தலாம் என்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தியது. இதன் பிறகு சார்பு நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணையை நடத்துவதில் மேலும் தளர்வை அறிவித்தது. இதுகுறித்து, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம், சிறு வழக்குகள் நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிமன்றங்கள், தாலுகா நீதிமன்றங்களில் தினமும் 20 வழக்குகளை விசாரிக்கலாம். சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவு செப்டம்பர் 28ம் ேததி முதல் அமலுக்கு வரும்.

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் நீதிமன்றங்களில் தற்போதைய நிலையே நீடிக்கும். மேலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா நீதிமன்றத்திலும் தற்போதைய நிலையே நீடிக்கும். அதே ேநரத்தில் புதுச்சேரி மாநிலம் மாஹே, ஏனாம் தாலுகா நீதிமன்றங்கள் புதிய தளர்வுகளுடன் செயல்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: