குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளியை நடத்தும் செலவை ஏற்க தயார்: குஜராத் முதல்வருக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ் வழி கல்வி வழங்கும் பள்ளி தொடர்ந்து நடைபெற அனைத்து செலவையும் தமிழக அரசு ஏற்க தயாராக உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார். இதுகுறித்து  குஜராத் முதல்வர் விஜய் ரூபனிக்கு முதல்வர் எடப்பாடி  பழனிசாமி நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: குஜராத்  மாநிலம் அகமதாபாத்தில் உள்ள, புலம் பெயர்ந்து சென்ற தொழிலாளிகளுக்கான  தமிழ் வழி கல்வி வழங்கும் பள்ளியை திடீரென்று மூடியது மிகுந்த  வேதனை அளிக்கிறது. குறைந்த மாணவர் வருகையை காரணம் காட்டி இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் வழி கல்வியில் படிக்கும் அந்த குழந்தைகள் கல்வியை தொடர்வதற்கு வேறு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

பெருமை  வாய்ந்த வரலாறும், கலாசாரமும் கொண்ட மிக பழமை வாய்ந்த மொழி தமிழ்.  குஜராத்தின் மேம்பாட்டுக்காக தமிழர்கள் பங்களித்துள்ளனர், பங்களித்துக்  கொண்டிருக்கிறார்கள். குஜராத்தில் சிறுபான்மை மொழியாக உள்ள தமிழ் மொழியின்  எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே  இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு, தமிழ் வழி கல்வி வழங்கும் பள்ளி  தொடர்ந்து நடைபெற தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

அகமதாபாத்தில் உள்ள  அந்த பள்ளி தொடர்ந்து நடைபெறுவதற்கான அனைத்து செலவையும் ஏற்க தமிழக அரசு  தயாராக உள்ளது. அங்குள்ள  தமிழ் மொழி சிறுபான்மையினரின் கல்வி பெறும் உரிமையை குஜராத் அரசு  பாதுகாக்கும் என்று நம்புகிறேன். இதில் விரைவான நடவடிக்கை எடுக்க  வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: