×

தங்கம் விலை ஒரே நாளில் 448 குறைந்தது: ஒரு வாரத்தில் 1,552 சரிவு: சவரன் 38 ஆயிரம்

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.448 குறைந்தது. ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் ரூ.1.552 அளவுக்கு குறைந்துள்ளது. சவரன் ரூ.38 ஆயிரத்துக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் இன்னும் விலை குறையும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலை கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. படிப்படியாக உயர்ந்து ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.43,328க்கு விற்கப்பட்டது. இது தான் தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. அதன் பிறகு தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,820க்கும், சவரன் ரூ.38,560க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலையில் தங்கம் கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.4,755க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.38,040க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை காலையில் விற்பனையான விலையை விட மாலையில் சற்று குறைந்தது. அதாவது நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.56 குறைந்து ஒரு கிராம் ரூ.4,764க்கும், சவரனுக்கு ரூ.448 குறைந்து ஒரு சவரன் ரூ.38,112க்கும் விற்க்கப்பட்டது. தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,552 அளவுக்கு குறைந்துள்ளது. ஜெட் வேகத்தில் அதிகரித்த வந்த தங்கம் குறைந்து வருவதால் நகைக்கடைகளில் நகை விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.‘

இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: தங்கம் விலை அடுத்த மாதம் 15ம் தேதி வரை இதே மாதிரி குறையும். இதற்கு காரணம், ஒரு புறம் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு. மறுபுறம் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், அக்டோபர் மாதம் வரை விலை குறையும். அதன் பிறகு அமெரிக்க தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் தங்கம் விலை உயரும். தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும். நவம்பர், டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை அதிக அளவில் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Gold price fell 448 in one day: 1,552 decline in one week: razor 38 thousand
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...