குன்றத்தூர் அருகே பரபரப்பு பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில்  நேற்று காலை பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம்  மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இப்பகுதியில் புகை மூட்டமாக மாறியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்தவர் முருகன் (42). குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில், சொந்தமாக பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறார். இங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்களை தேக்கி வைத்து, அதனை மீண்டும் மறுசுழற்சி செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை பிளாஸ்டிக் குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.  

சிறிது நேரத்தில், மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதை கண்டதும், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே, தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. தகவலறிந்து பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்களில் வந்த வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. தீ மற்ற கம்பெனிகளுக்கும் பரவுவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. புகாரின்படி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், பிளாஸ்டிக் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, புகை மண்டலமாக காட்சியளித்தது. அங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு கடும் சிரமம் அடைந்தனர்.

Related Stories: